தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன், வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன், பொறுமையே இல்லாதவன், பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும், பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன், பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன், நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும், மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ? பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வெந்து போய் வற்றிவிடவும், பெருமைமிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும், அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, ரிக்கு வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும், எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில் அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே.
புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன் ... தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் ... தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன், புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் ... வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன், பொறையிலன் ... பொறுமையே இல்லாதவன், கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றி ... பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும், பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ... பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன், கொடியேன் நின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் ... பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், கட்டைப் புத்தியன் மட்டன் ... குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன், கதியிலன் ... நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும் ... வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு ... கதிர்காமத்தையும், வட்டமலையையும், மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு அடைவேனோ ... முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ? குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் ... பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறிவெந்து உட்க ... கதறி, வெந்து போய் வற்றிவிடவும், கட்புர துட்டன் குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய ... பெருமைமிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், சென்று ஒருநேமிக் குவடு ஒதுங்க ... ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், சொர்க்கத்தர் இடுக்கங் கெட ... தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும், நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் ... அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் குடியேற ... வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய ... பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும், சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட ... எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங்கைக் கொத்து ... அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் ஒத்துமு ழக்குஞ் சரண கஞ்சத்தில் ... தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில் பொற்கழல் கட்டும் பெருமாளே. ... அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே.