கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும்
பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை
சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை
புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம்
பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா
எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை
பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோ தான்
அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றும்
தெளி தரும் சித்தர்க்கு தெளிசில்
கொந்த அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை
அறவி நுண் பச்சை பொன் கொடி
கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல(ம்) மேரு
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட
நுசுப்பின் தருணி
சங்கு உற்று தத்து திரை கம்பையினூடே
தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு
அறம் இரண்டு எட்டுஎட்டும் வளர்க்கும் தலைவி
பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே.
பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை, சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும், திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை, பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம், பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து, பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி, எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை, (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ? (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி, அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி, சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே, தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே.
கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும் ... பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும் ... பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும் ... கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை ... கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை, சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும் ... சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும், களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை ... திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை, புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம் ... பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம், பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் ... பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து, புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா ... பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி, எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை ... எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை, பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் ... (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோ தான் ... உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ? அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றும் ... (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் ... தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த கொந்த அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை ... பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி, அறவி நுண் பச்சை பொன் கொடி ... அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு ... கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல(ம்) மேரு ... எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட ... ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், நுசுப்பின் தருணி ... இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி, சங்கு உற்று தத்து திரை கம்பையினூடே ... சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே, தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு ... தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு அறம் இரண்டு எட்டுஎட்டும் வளர்க்கும் தலைவி ... முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின் பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே. ... பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே.