தெரியல் அம் செச்சைக் கொத்து முடிக்கும்
பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும்
சிறை விடும் சொர்க்கத்துச் சுரரைக் கங்கையில் வாழும் சிறுவன் என்று இச்சைப்பட்டு பஜிக்கும்படி
பெரும் பத்திச் சித்ர கவித்வம் சிறிதும் இன்றிச் சித்தப் பரிசுத்தம் பிறவாதே
பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டம் பட்டனர் தத்வம் பலவையும் கற்றுத் தர்க்க மதத்(து) வம்பு அழியாதே
பர பதம் பற்றப் பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றிப் பற்று அற நிற்கும் பர வ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்று என் துயர் போமோ
சரியுடன் துத்திப் பத்தி முடிச் செம் பண தரம் கைக்குக் கட்டிய நெட்டன் தனி சிவன் பக்கத்து அற்புதை
பற்பம் திரி சூலம் தரி கரும்பு ஒக்கத் தக்க மொழிச் சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி சுரும்பு இக்குப் பத்ரை
எவர்க்கும் தெரியாத பெரிய பண் தத்தைச் சத்திய பித்தன் பிரிதி உண் கற்புப் பச்சை எறிக்கும் ப்ரபையள்
தண்டில் கைப் பத்ம மடப் பெண் கொடி வாழ்வே
பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும் பிளவிடும் சத்திக் கைத்தல
நித்தம் பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களை சூடிக் கொள்பவனும், குதிரையாகிய மயிலை திக்குகளின் கோடி வரையில் நடத்துபவனும், விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும், கங்கையில் வளர்ந்த குழந்தை என்றும் ஆசை நிரம்பி பாடிப் போற்றும்படியான பெரிய பக்தியும், அழகிய கவி பாடும் திறனும் கொஞ்சமும் இல்லாமல், மனதில் பரிசுத்த நிலை தோன்றாமல் (இருக்கும் நான்), பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்க, பெரிய நிலையை அடைந்து பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர் பேசும் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று, தர்க்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழிந்து போகாமல், மேலான வீட்டின்ப நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள, பற்று நீங்கி நிற்கும் மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே. அவ்வாறு இருக்கின்ற எனது துயர் போவதற்கு வழி உண்டோ? ஒழுங்காக பணாமுடி வரிசையை தலையில் கொண்டதும், செவ்விய படத்தைக் கொண்டதுமான பாம்பை கையில் கட்டியுள்ள பெருமையோன், ஒப்பற்ற சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் அற்புதத் தலைவி, திருநீறு, முத்தலைச் சூலம் இவைகளைத் தரித்துள்ளவள், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய சுந்தரி, தோன்றிப் பெருத்துள்ள மார்பகங்களை உடைய துர்க்கை, வண்டுகள் மொய்க்கும் கரும்பு ஏந்திய பத்ரகாளி, யாரும் அறிய ஒண்ணாத பெருமை மிக்க, பண் போன்ற மொழியை மிழற்றும் கிளி, உண்மையில் மிகுந்த பித்தனாகிய சிவ பெருமானுடைய அன்பை உட்கொண்ட, கற்பு வாய்ந்த, பச்சை நிறக் கதிர் வீசும் பேரொளியாள், வீணை ஏந்திய கையினள், தாமரை மலரில் வீற்றிருக்கும் மட மங்கை, கொடி போன்ற பார்வதியின் செல்வமே, பிரமன் படைத்த உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தனே, நாள் தோறும் மிஞ்சும் சிறப்புடன் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தெரியல் அம் செச்சைக் கொத்து முடிக்கும் ... மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களை சூடிக் கொள்பவனும், பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும் ... குதிரையாகிய மயிலை திக்குகளின் கோடி வரையில் நடத்துபவனும், சிறை விடும் சொர்க்கத்துச் சுரரைக் கங்கையில் வாழும் சிறுவன் என்று இச்சைப்பட்டு பஜிக்கும்படி ... விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும், கங்கையில் வளர்ந்த குழந்தை என்றும் ஆசை நிரம்பி பாடிப் போற்றும்படியான பெரும் பத்திச் சித்ர கவித்வம் சிறிதும் இன்றிச் சித்தப் பரிசுத்தம் பிறவாதே ... பெரிய பக்தியும், அழகிய கவி பாடும் திறனும் கொஞ்சமும் இல்லாமல், மனதில் பரிசுத்த நிலை தோன்றாமல் (இருக்கும் நான்), பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டம் பட்டனர் தத்வம் பலவையும் கற்றுத் தர்க்க மதத்(து) வம்பு அழியாதே ... பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்க, பெரிய நிலையை அடைந்து பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர் பேசும் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று, தர்க்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழிந்து போகாமல், பர பதம் பற்றப் பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றிப் பற்று அற நிற்கும் பர வ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்று என் துயர் போமோ ... மேலான வீட்டின்ப நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள, பற்று நீங்கி நிற்கும் மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே. அவ்வாறு இருக்கின்ற எனது துயர் போவதற்கு வழி உண்டோ? சரியுடன் துத்திப் பத்தி முடிச் செம் பண தரம் கைக்குக் கட்டிய நெட்டன் தனி சிவன் பக்கத்து அற்புதை ... ஒழுங்காக பணாமுடி வரிசையை தலையில் கொண்டதும், செவ்விய படத்தைக் கொண்டதுமான பாம்பை கையில் கட்டியுள்ள பெருமையோன், ஒப்பற்ற சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் அற்புதத் தலைவி, பற்பம் திரி சூலம் தரி கரும்பு ஒக்கத் தக்க மொழிச் சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி சுரும்பு இக்குப் பத்ரை ... திருநீறு, முத்தலைச் சூலம் இவைகளைத் தரித்துள்ளவள், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய சுந்தரி, தோன்றிப் பெருத்துள்ள மார்பகங்களை உடைய துர்க்கை, வண்டுகள் மொய்க்கும் கரும்பு ஏந்திய பத்ரகாளி, எவர்க்கும் தெரியாத பெரிய பண் தத்தைச் சத்திய பித்தன் பிரிதி உண் கற்புப் பச்சை எறிக்கும் ப்ரபையள் ... யாரும் அறிய ஒண்ணாத பெருமை மிக்க, பண் போன்ற மொழியை மிழற்றும் கிளி, உண்மையில் மிகுந்த பித்தனாகிய சிவ பெருமானுடைய அன்பை உட்கொண்ட, கற்பு வாய்ந்த, பச்சை நிறக் கதிர் வீசும் பேரொளியாள், தண்டில் கைப் பத்ம மடப் பெண் கொடி வாழ்வே ... வீணை ஏந்திய கையினள், தாமரை மலரில் வீற்றிருக்கும் மட மங்கை, கொடி போன்ற பார்வதியின் செல்வமே, பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும் பிளவிடும் சத்திக் கைத்தல ... பிரமன் படைத்த உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தனே, நித்தம் பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. ... நாள் தோறும் மிஞ்சும் சிறப்புடன் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.