கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தைச் செற்று
அவ்விதழ்ப் பங்கயனை முன் குட்டிக் கைத்தளை இட்டு உம்பரை ஆளும் கடவுள்
அன்புற்றுக் கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கைக் கற்பக(ம்)
முன் தம் கர தலம் பற்றப் பெற்ற ஒருத்தன் ஜக தாதை
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன்
பத்தர்க்குத் துணை நிற்கும் புதியவன்
செச்சைப் புட்பம் மணக்கும் பல பாரப் புயன் எனும்
சொல் கற்றுப் பிற கற்கும் பசை ஒழிந்து
அத்தத்து இக்கு என நிற்கும் பொருள் தொறும் பொத்தப் பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ
அனல் விடும் செக் கண் திக்(கு) கயம் எட்டும்
பொர அரிந்திட்ட எட்டில் பகுதிக் கொம்பு அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன்
திடமாக அடியொடும் பற்றிப் பொன் கயிலைக் குன்றது பிடுங்கப் புக்க பொழுது
அக் குன்று அணி புயம் பத்துப் பத்து நெரிப்பு உண்டவன்
நீடும் தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன்
கொற்றத்து உக்ர அரக்கன் தச முகன் கைக்குக் கட்கம் அளிக்கும் பெரியோனும்
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும்
தெற்குச் சற்குரு வெற்பும் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
பருத்த கிரவுஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அன்று அசுரர்களின் படையை அழித்து, அந்த இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட தெய்வம் அவன். அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலன் அவன். பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியோன் அவன். வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவன் அவன் என்னும் வகையில் (முருகனைப் பற்றிய) சொற்களையே கற்று, பிறர் சம்பந்தமான சொற்களைக் கற்க வேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து நிற்கும் குணம் அமைய, செய்யுள் தோறும் பொதியப் படுவதாகிய ஒப்பற்ற செல்வத்தை நான் அடைவேனோ? நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய அஷ்ட திக்கஜங்களும் (எட்டுத் திக்கு யானைகளும்) தன்னோடு சண்டை செய்ய, (தன் மார்பில்) ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், பலத்துடன், அடியோடு பற்றி பொன்னாலாகிய கயிலை மலையை பிடுங்கப் புகுந்த போது, அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும், வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும், தேவி பார்வதியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் (அர்த்தநாரீசுரர் விளங்கும்) மலையாகிய திருச்செங்கோடும், தெற்கே உள்ள தலமாகிய சுவாமி மலையும், திருத்தணிகையும் நீ இருக்கும் தலங்களாகப் பெற்று, காஞ்சீபுரத்தில் நிற்கின்ற பெருமாளே.
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தைச் செற்று ... பருத்த கிரவுஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அன்று அசுரர்களின் படையை அழித்து, அவ்விதழ்ப் பங்கயனை முன் குட்டிக் கைத்தளை இட்டு உம்பரை ஆளும் கடவுள் ... அந்த இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட தெய்வம் அவன். அன்புற்றுக் கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கைக் கற்பக(ம்) ... அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன் தம் கர தலம் பற்றப் பெற்ற ஒருத்தன் ஜக தாதை ... முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் ... தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலன் அவன். பத்தர்க்குத் துணை நிற்கும் புதியவன் ... பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியோன் அவன். செச்சைப் புட்பம் மணக்கும் பல பாரப் புயன் எனும் ... வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவன் அவன் என்னும் வகையில் சொல் கற்றுப் பிற கற்கும் பசை ஒழிந்து ... (முருகனைப் பற்றிய) சொற்களையே கற்று, பிறர் சம்பந்தமான சொற்களைக் கற்க வேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அத்தத்து இக்கு என நிற்கும் பொருள் தொறும் பொத்தப் பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ ... அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து நிற்கும் குணம் அமைய, செய்யுள் தோறும் பொதியப் படுவதாகிய ஒப்பற்ற செல்வத்தை நான் அடைவேனோ? அனல் விடும் செக் கண் திக்(கு) கயம் எட்டும் ... நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய அஷ்ட திக்கஜங்களும் (எட்டுத் திக்கு யானைகளும்) பொர அரிந்திட்ட எட்டில் பகுதிக் கொம்பு அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் ... தன்னோடு சண்டை செய்ய, (தன் மார்பில்) ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், திடமாக அடியொடும் பற்றிப் பொன் கயிலைக் குன்றது பிடுங்கப் புக்க பொழுது ... பலத்துடன், அடியோடு பற்றி பொன்னாலாகிய கயிலை மலையை பிடுங்கப் புகுந்த போது, அக் குன்று அணி புயம் பத்துப் பத்து நெரிப்பு உண்டவன் ... அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், நீடும் தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் ... அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும், கொற்றத்து உக்ர அரக்கன் தச முகன் கைக்குக் கட்கம் அளிக்கும் பெரியோனும் ... வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும், தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் ... தேவி பார்வதியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் (அர்த்தநாரீசுரர் விளங்கும்) மலையாகிய திருச்செங்கோடும், தெற்குச் சற்குரு வெற்பும் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. ... தெற்கே உள்ள தலமாகிய சுவாமி மலையும், திருத்தணிகையும் நீ இருக்கும் தலங்களாகப் பெற்று, காஞ்சீபுரத்தில் நிற்கின்ற பெருமாளே.