செடி உடம்பு அத்தித் தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம்
சிறை திரண்டு ஒக்கத் தொக்க வினைப் பந்த விகாரம்
திமிர துங்கத் தத்துத் திரை எற்றும் செனன பங்கத்துத் துக்க கடல் கண் திரு(கு) குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் கரண ஆதி குடி புகும் பொக்கப் புக்கில்
இறப்பின் குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில் மலத்தின் குகை
சுமந்து எட்டுத் திக்கிலு(ம்) முற்றும் தடுமாறும் குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும் சமய சங்கத்தைத் தப்பி இருக்கும் குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய்
படி தரும் கற்புக் கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்குத் தர(ம்) முத்தம் பணி நிதம்பத்துச் சத்தி உகக்கும் குமரேசா
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் பரமர் வந்திக்க தக்க பதத்தன் குரு நாதா
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்தி பட்ட குழற்கும் துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த
சுத்த இருக்கும் சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே.
பாவத்துக்கு இடமான உடம்பு எலும்பால் ஆகிய வீடு. ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம். சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பந்த பாசக் கலக்கம். இருண்டதும், உயர்ந்து எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு என்னும் துக்ககரமான கடலிடத்தே, பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைச்சல் உற்றுச் சுழன்று (அந்தப் பிறவிக் கடலில் மிதக்கும்) தெப்பம் போன்ற (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய) முக்கரணங்கள் குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம். இறந்து போனால் (இந்த வஞ்சகக்) குடிசை வெந்து போகும் கொட்டகை. (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களின் இருப்பிடம். (ஆகிய இந்த உடலைச் சுமந்து) எட்டுத் திசைகளிலும், எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும் (உத்தம) குணத்தை அடைந்தும், (சாந்த) குணத்திலேயே உட்பட்டு எப்போதும் நான் பொருந்தி இருக்கும்படி கண் பார்த்து அருளுக. முறைமையான கற்பு வாய்ந்த, கற்பகம் அனையவள். முக்கண் கொண்ட கொடி போன்றவள். பசுமையான அலங்காரத்துக்குத் தகுதியான முத்து மாலை அணிந்தவள். பாம்பு போன்ற ஜனன உறுப்பையும் கொண்ட தேவியாகிய உமை மகிழ்கின்ற குமரேசனே, மனத்தை நிலை நிறுத்தி, (ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும்) எட்டு எழுத்தையும், நாள் தோறும் போற்றித் துதிக்கும் அடியார்களுக்கு வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குரு நாதனே, கைவளை அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்த வாயிதழுக்கும், குறப் பெண்ணாகிய வள்ளியின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும் நெகிழ்கின்ற மனதை உடையவனே, சுத்தமாகிய ரிக்கு வேதமும் தேவர்களும் வணங்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
செடி உடம்பு அத்தித் தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம் ... பாவத்துக்கு இடமான உடம்பு எலும்பால் ஆகிய வீடு. ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம். சிறை திரண்டு ஒக்கத் தொக்க வினைப் பந்த விகாரம் ... சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பந்த பாசக் கலக்கம். திமிர துங்கத் தத்துத் திரை எற்றும் செனன பங்கத்துத் துக்க கடல் கண் திரு(கு) குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் கரண ஆதி குடி புகும் பொக்கப் புக்கில் ... இருண்டதும், உயர்ந்து எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு என்னும் துக்ககரமான கடலிடத்தே, பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைச்சல் உற்றுச் சுழன்று (அந்தப் பிறவிக் கடலில் மிதக்கும்) தெப்பம் போன்ற (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய) முக்கரணங்கள் குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம். இறப்பின் குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில் மலத்தின் குகை ... இறந்து போனால் (இந்த வஞ்சகக்) குடிசை வெந்து போகும் கொட்டகை. (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களின் இருப்பிடம். சுமந்து எட்டுத் திக்கிலு(ம்) முற்றும் தடுமாறும் குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும் சமய சங்கத்தைத் தப்பி இருக்கும் குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் ... (ஆகிய இந்த உடலைச் சுமந்து) எட்டுத் திசைகளிலும், எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும் (உத்தம) குணத்தை அடைந்தும், (சாந்த) குணத்திலேயே உட்பட்டு எப்போதும் நான் பொருந்தி இருக்கும்படி கண் பார்த்து அருளுக. படி தரும் கற்புக் கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்குத் தர(ம்) முத்தம் பணி நிதம்பத்துச் சத்தி உகக்கும் குமரேசா ... முறைமையான கற்பு வாய்ந்த, கற்பகம் அனையவள். முக்கண் கொண்ட கொடி போன்றவள். பசுமையான அலங்காரத்துக்குத் தகுதியான முத்து மாலை அணிந்தவள். பாம்பு போன்ற ஜனன உறுப்பையும் கொண்ட தேவியாகிய உமை மகிழ்கின்ற குமரேசனே, பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் பரமர் வந்திக்க தக்க பதத்தன் குரு நாதா ... மனத்தை நிலை நிறுத்தி, (ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும்) எட்டு எழுத்தையும், நாள் தோறும் போற்றித் துதிக்கும் அடியார்களுக்கு வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குரு நாதனே, தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்தி பட்ட குழற்கும் துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த ... கைவளை அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்த வாயிதழுக்கும், குறப் பெண்ணாகிய வள்ளியின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும் நெகிழ்கின்ற மனதை உடையவனே, சுத்த இருக்கும் சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே. ... சுத்தமாகிய ரிக்கு வேதமும் தேவர்களும் வணங்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.