அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கிநலங்கிட அவச மோகம் விளைந்து தளைந்திட …. அனைமீதே அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகாநுதி பங்க விதம் செய்து அதரபானம் அருந்தி மருங்குஇற …முலைமேல் வீழ்ந்து உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின்முயங்குதல் ஒழியுமாறுதெளிந்து உளம் அன்பொடு … சிவயோகத்து உருகு ஞானபரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பணி உபய சீதள பங்கய மென் கழல் …தருவாயே இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம்புனை இரதி வேள் பணி தந்தையும் அந்தண ….. மறையோனும் இனிது உறாதுஎதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவ சங்கர சங்கர எனமிகா வரு நஞ்சினை உண்டவர் …அருள்பாலா வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடி பட விரோதம் இடும் குலசம்ப்ரமன் மகர வாரி கடைந்த நெடும் புயல் …. மருகோனே வளரும் வாழையு(ம்) மஞ்சளும் இஞ்சியும் இடை விடாதுநெருங்கிய மங்கல மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை…பெருமாளே.
கூந்தல் பாரம் அலைந்து குலைய, முகம் வியர்வை தோன்றி மாசு பெற, தன் வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க, படுக்கையில், சிவந்த வாயினின்றும் சிரிப்பை வெளிப்படுத்தின களிப்புடன், நெருங்கிய நகங்களின் நுனி கொண்டு நகக் குறி பதியுமாறு செய்து, இதழ்களினின்றும் வரும் ஊறலை உண்டு, இடை அற்றுப் போகுமாறு மார்பின் மேல் வீழ்ந்து, உள்ளமும் மாறும்படி சேர்கின்ற விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த இன்பத்தில் முழுகுதல் ஒழியும் வண்ணம் மனம் தெளிந்து, உள்ளம் அன்புடன் சிவயோக நிலையில் உருகுகின்ற ஞானமும், மேலான ஆகம அறிவும் படைத்த ஞானிகள் தியானிக்கின்ற, அழகிய சிலம்பை அணிந்த, இரு குளிர்ந்த தாமரை போன்ற மென்மையான திருவடியைத் தந்து அருளுக. தளராது வளரும், சந்தனமும் குங்குமப் பூவின் கலவையும் நிறைந்த, மார்பின் அழகைக் கொண்ட ரதியின் கணவனான மன்மதன் தொழுகின்ற தந்தையாகிய திருமாலும், அந்தண பிரமனும் துன்புற, அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா என்று முறையிட, (பாற்கடலில்) பொங்கி எழுந்த (ஆலகால) விஷத்தை உண்டவராகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, வளர்ச்சியுற்ற அசுரர்களுடைய (கர்வம் கொண்ட) தலைகள் பொடிபடுமாறு பகைமை காட்டிய நற்சிறப்பு பெற்றவனும், சுறா மீன்கள் நிறைந்த கடலை (தான் ஒருவனாகக்) கடைந்தவனும், நெடிய மேகத்தின் நிறத்தைக் கொண்டவனுமான திருமாலின் மருமகனே, வளர்கின்ற வாழையும், மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் உள்ள சிறந்த நகரமாகிய திருச்செந்தூரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.