மயிர் அவிழ்ந்து கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப் போல சுழல, பிறைச் சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி, இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க, தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம் கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை உடைய பொது மகளிர் தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும் மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும் அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ? பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து, ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து, தவம் நிறைந்த தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில் அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான் மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே, சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு, வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த அழகிய சுடர் வேலனே, தினைப் புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில் குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே.
குலைத்து மயிர்க் கலைத்து வளைக் கழுத்து மணித் தனப்புரளக் குவித்த விழிக் கயற்சுழல ... மயிர் அவிழ்ந்து கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப் போல சுழல, பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி மயற் கொளுத்தி இணைக் குழைச்செவியில் தழைப்ப ... பிறைச் சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி, இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க, பொறித் தனபாரப் பொலித்து மதத் தரித்த கரிக் குவட்டு முலைப் பளப்பளெனப் புனைத்த துகிற் பிடித்த இடைப் பொதுமாதர் ... தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம் கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை உடைய பொது மகளிர் புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக் குலுக்கில் அறப் பசப்பி மயற் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ ... தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும் மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும் அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ? தலத்த நுவைக் குனித்தொரு முப்புரத்தை விழக்கொளுத்தி மழுத்தரித்து புலிக் கரித்துகிலைப் பரமாகத் தரித்து ... பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து, ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து, தவச் சுரர்க்கண் முதற் பிழைக்க மிடற்றடக்கு விடச் சடைக்கடவுட் சிறக்க பொருள் பகர்வோனே ... தவம் நிறைந்த தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில் அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான் மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே, சிலுத்த சுரர்க் கெலித்து மிகக் கொளுத்தி மறைத் துதிக்க அதிற் செழிக்க அருட் கொடுத்த மணிக் கதிர்வேலா ... சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு, வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த அழகிய சுடர் வேலனே, தினைப்பு னமிற் குறத்தி மகள் தனத்தின் மயற் குளித்து மகிழ்த் திருத்தணியில் தரித்த புகழ்ப் பெருமாளே. ... தினைப் புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில் குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே.