எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் எரிவழங்கு வெப்பு.....வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் குலைப்பொடு இருமலென்று உரைக்கும்.....இவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து சுத்த மதிம யங்கி விட்டு.....மடியாதே மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் வந்து முத்தி.....தரவேணும் நினை வணங்கு பத்தரனை வருந்தழைக்க நெறியில் நின்ற வெற்றி.....முனைவேலா நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கு.....முருகோனே தினை விளங்கலுற்ற புனஇளங் குறத்தி செயலறிந்து அணைக்கு.....மணிமார்பா திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த சிறை திறந்து விட்ட.....பெருமாளே.
எனக்கு வந்த குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய், கொதிப்பைத் தருகிற காய்ச்சல், சொல்ல முடியாத வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற வலிப்புநோய், நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த நோய்களுடனே தவித்து, வீடுகள், பெண்டிர், மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி, நல்லறிவு மயங்கிப்போய் அடியேன் இறக்காதவண்ணம், நீ இன்று என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில் வந்து எனக்கு பேரின்ப முக்தியை அருள்வாயாக. உன்னைத் தொழும் அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி அதற்கான வழியில் அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன் நிற்கும் வேலனே, அழியாத திருத்தணிகைப் பதியில் விளங்குகின்ற அழகிய நெடிய குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே, தினைப்பயிர் செழிப்பாக வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை, அவளுடைய அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்து விட்டு தேவர்களை விடுவித்த பெருமாளே.