தனதான தத்த தந்த தனதான தத்த தந்த தனதான தத்த தந்த ...... தனதான
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த ...... நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டும் விரக அனலத்து அழுந்த நகை ஆடி
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து
சில நாள் மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட
தொந்த முழுமாயையில் பிணங்கள் வசமாகி முடியாது
பொற் சதங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே
புருகூதன் உள் குளிர்ந்த கனகா புரி ப்ரசண்ட புனிதா ம்ருகக் கரும்பு புணர் மார்பா
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே
திரளா மணிக் குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே.
கண்களால் மருட்டி நின்று, மார்பின் மேல் உள்ள மேலாடையை நீக்கி, மூண்டு எழும் காம அக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து, விலையாக நிரம்பச் செம்பொற்காசுகள் வரவும், தமது சூழ்ச்சியைப் பரப்பி, வஞ்சகம் நிறைந்த காம லீலைகளுக்கு உடன்பட்டு, சில நாட்கள் போன பிறகு, சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி, சண்டையும் கூச்சலுமாகி ஏற்படும் பகைமை பூணுகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்கள் போன்ற பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு என் வாழ்க்கை முடிவுறாமல், பொன் கிண்கிணிகள் செய்யும் இசையும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள, என்றும் இளமையான, நன்மை அளிக்கும் உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக. பொழிகின்ற மழை மேகத்தை நிகர்க்கும் கருமையான யமராஜன் அஞ்சும்படி அன்று, போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே, இந்திரன் மனம் குளிரும்படியாக தேவருலகத்தைக் காத்தருளிய வல்லமை வாய்ந்தவனே, தூய்மையானவனே, மான் ஈன்ற கரும்பு போன்ற இனிய வள்ளியை அணைக்கும் மார்பனே, செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருக்கும் கிழப் பிரமன் நாணும்படி, அன்று நிறை செல்வப் பேருண்மையை (பிரணவப் பொருளை) சொல்லி அருளிய முருகனே, (நின் திருமார்பில் உள்ள) திரளான ரத்தினக் கூட்டங்கள் சூரிய உதய ஒளியை வென்ற சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டும் விரக அனலத்து அழுந்த நகை ஆடி ... கண்களால் மருட்டி நின்று, மார்பின் மேல் உள்ள மேலாடையை நீக்கி, மூண்டு எழும் காம அக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து, விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து ... விலையாக நிரம்பச் செம்பொற்காசுகள் வரவும், தமது சூழ்ச்சியைப் பரப்பி, வஞ்சகம் நிறைந்த காம லீலைகளுக்கு உடன்பட்டு, சில நாள் மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட ... சில நாட்கள் போன பிறகு, சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி, சண்டையும் கூச்சலுமாகி ஏற்படும் தொந்த முழுமாயையில் பிணங்கள் வசமாகி முடியாது ... பகைமை பூணுகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்கள் போன்ற பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு என் வாழ்க்கை முடிவுறாமல், பொற் சதங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே ... பொன் கிண்கிணிகள் செய்யும் இசையும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள, என்றும் இளமையான, நன்மை அளிக்கும் உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக. பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே ... பொழிகின்ற மழை மேகத்தை நிகர்க்கும் கருமையான யமராஜன் அஞ்சும்படி அன்று, போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே, புருகூதன் உள் குளிர்ந்த கனகா புரி ப்ரசண்ட புனிதா ம்ருகக் கரும்பு புணர் மார்பா ... இந்திரன் மனம் குளிரும்படியாக தேவருலகத்தைக் காத்தருளிய வல்லமை வாய்ந்தவனே, தூய்மையானவனே, மான் ஈன்ற கரும்பு போன்ற இனிய வள்ளியை அணைக்கும் மார்பனே, செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே ... செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருக்கும் கிழப் பிரமன் நாணும்படி, அன்று நிறை செல்வப் பேருண்மையை (பிரணவப் பொருளை) சொல்லி அருளிய முருகனே, திரளா மணிக் குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே. ... (நின் திருமார்பில் உள்ள) திரளான ரத்தினக் கூட்டங்கள் சூரிய உதய ஒளியை வென்ற சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.