விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி
தன தனத்த னந்தன தனதன என ஒலி விரிப்ப
வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ
முக ஒளி வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத
தரித்த தந்திரி மறி புய(ம்) மிசை பல பணிக்கு இலங்கிய
பரிமள குவடு இணை தனக் கொழுந் துகள் ததை பட கொடி இடை படு சேலை தரித்து
சுந்தரம் என அடர் பரிபுர பதச் சிலம்போடு நடம் இடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவது ஒழியாதோ
உரித்த வெம் கய(ம்) மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே
உவட்டி வந்திடும் அவுணரோடு எழு கடல் குவட்டையும் பொடி பட
சத(ம்) முடிவுற உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வு உற விடும் வேலா
வரித் தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய வ(ண்)ணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புனம் மருவிய கிளி தனை மயக்கி
மந்திர குரு மலை தனில் அமர் பெருமாளே.
விரிந்த செழுமை வாய்ந்த கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள் தன தனத்த னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப, வளமை வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற, மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும் பொன் குண்டலங்களும் அழகு வீச, முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும் இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த (வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ, ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின் மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க, மணமுள்ள, மலைக்கு நிகரான மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை அணிந்து, அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ? உரித்த கொடிய யானை, மான், புலி (இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு (இவைகளைத் தரித்த) சடையை உடையவரும், ஒப்பற்ற (பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான் வணங்கும் குருபரனே, முருகனே, வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி, நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே, வண்டுகள் வரிசையாக மொய்க்கும் துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும் ஆகிய திருமாலின் மருகனே, (வள்ளி மலைக்) காட்டில் வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய (தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே, மந்திர உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி ... விரிந்த செழுமை வாய்ந்த கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள் தன தனத்த னந்தன தனதன என ஒலி விரிப்ப ... தன தனத்த னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப, வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய ... வளமை வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற, மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ ... மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும் பொன் குண்டலங்களும் அழகு வீச, முக ஒளி வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத ... முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும் இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த (வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ, தரித்த தந்திரி மறி புய(ம்) மிசை பல பணிக்கு இலங்கிய ... ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின் மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க, பரிமள குவடு இணை தனக் கொழுந் துகள் ததை பட கொடி இடை படு சேலை தரித்து ... மணமுள்ள, மலைக்கு நிகரான மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை அணிந்து, சுந்தரம் என அடர் பரிபுர பதச் சிலம்போடு நடம் இடு கணிகையர் ... அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவது ஒழியாதோ ... தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ? உரித்த வெம் கய(ம்) மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் ... உரித்த கொடிய யானை, மான், புலி (இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு (இவைகளைத் தரித்த) சடையை உடையவரும், ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே ... ஒப்பற்ற (பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான் வணங்கும் குருபரனே, முருகனே, உவட்டி வந்திடும் அவுணரோடு எழு கடல் குவட்டையும் பொடி பட ... வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி, சத(ம்) முடிவுற உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வு உற விடும் வேலா ... நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே, வரித் தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய வ(ண்)ணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே ... வண்டுகள் வரிசையாக மொய்க்கும் துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும் ஆகிய திருமாலின் மருகனே, வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புனம் மருவிய கிளி தனை மயக்கி ... (வள்ளி மலைக்) காட்டில் வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய (தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே, மந்திர குரு மலை தனில் அமர் பெருமாளே. ... மந்திர உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.