விடமும் வடிவேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை விரவி உடன் மீளும் விழிகளும்
மென் புழுகு அது தோயும் ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இள நீரும் வட குல குன்றமும் வெருவுவன பார புளகித தனங்களும்
வெகு காம நடன பத நூபுரமு(ம்) முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச ப(பா)ரமும் இலங்கிய நளின மலர் சோதி மதி முக விம்பமும்
அ(ன்)ன நேராம் நடையு(ம்) நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என நகையும் உ(ள்)ள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும்
இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை வலமும் மாள
விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் அருள் புனை முராரி மருக
விளங்கிய மயில் ஏறி அடையலர்கள் மாள ஒரு நிமிடம் தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருள் பெருமாளே.
நஞ்சும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய், மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே மீளும் கண்களும், மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர் போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும், அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும் ஆகிய மார்பகங்களும், மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும் முகச் சோதியும், அன்னப் பறவைக்கு ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள் கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ? அழகுடைய (மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின் படைகள் முழுதும், இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க, ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே, விளங்குகின்ற மயிலில் மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருளிய பெருமாளே.
விடமும் வடிவேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை விரவி உடன் மீளும் விழிகளும் ... நஞ்சும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய், மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே மீளும் கண்களும், மென் புழுகு அது தோயும் ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இள நீரும் வட குல குன்றமும் வெருவுவன பார புளகித தனங்களும் ... மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர் போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும், அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும் ஆகிய மார்பகங்களும், வெகு காம நடன பத நூபுரமு(ம்) முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச ப(பா)ரமும் இலங்கிய நளின மலர் சோதி மதி முக விம்பமும் ... மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும் முகச் சோதியும், அ(ன்)ன நேராம் நடையு(ம்) நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என நகையும் உ(ள்)ள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ ... அன்னப் பறவைக்கு ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள் கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ? வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும் ... அழகுடைய (மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின் படைகள் முழுதும், இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை வலமும் மாள ... இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க, விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் அருள் புனை முராரி மருக ... ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே, விளங்கிய மயில் ஏறி அடையலர்கள் மாள ஒரு நிமிடம் தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருள் பெருமாளே. ... விளங்குகின்ற மயிலில் மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருளிய பெருமாளே.