மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாணி இட்டு
நெறி சேர்வார் மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
வலிய சாயகக் கண் மட மாதர் இகழ
வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
இளமை போய் ஒளித்து விடுமாறு
இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே
விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே.
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே.
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாணி இட்டு ... மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நெறி சேர்வார் மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த ... நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய சாயகக் கண் மட மாதர் இகழ ... வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து ... (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை போய் ஒளித்து விடுமாறு ... இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து ... இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே ... உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா ... ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே ... அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே ... மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே. ... விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே.