பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெறப் பரவு கயவாலே
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி
விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள்
தொழிலாலே விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலைமாதர் பொய்க் கலவி இனிதாமோ
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு எனத் தரையில் விழவேதான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருகா கடப்ப மலர் அணி மார்பா
சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே
சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே.
பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே, பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி, இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள். விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ? (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே, தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே, சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே, சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெறப் பரவு கயவாலே ... பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே, பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி ... பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி, விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் ... இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள். தொழிலாலே விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலைமாதர் பொய்க் கலவி இனிதாமோ ... விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ? மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு எனத் தரையில் விழவேதான் ... (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே, வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருகா கடப்ப மலர் அணி மார்பா ... தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே, சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே ... சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே, சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே. ... சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.