விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அனுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே சொ(ல்)லி
அழகாக விரி குரும்பைகளாம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம்
அதி விரகம் ஒங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி
இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சி(த்)தம் மால் கொ(ள்)ளும் மாதர் கண் வலையாலே எனது சிந்தையும் வாடி விடா வகை
அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால் எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளே
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு கு(கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள்
காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே.
பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த மேரு மலை போல, மிக்க காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி, இன்பத்துடன் அன்னப் பறவை போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர, எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும் விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப் போகாத வகைக்கு, அருள் பாலித்து அழகான தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ? ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க வலிமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி, நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி, மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே, ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல் ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே, வெற்றி வீரனே, சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும் பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே, (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அனுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே சொ(ல்)லி ... பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக விரி குரும்பைகளாம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் ... அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த மேரு மலை போல, அதி விரகம் ஒங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி ... மிக்க காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி, இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர ... இன்பத்துடன் அன்னப் பறவை போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர, எவர்களும் சி(த்)தம் மால் கொ(ள்)ளும் மாதர் கண் வலையாலே எனது சிந்தையும் வாடி விடா வகை ... எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும் விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப் போகாத வகைக்கு, அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால் எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளே ... அருள் பாலித்து அழகான தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ? மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு கு(கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா ... ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க வலிமை வாய்ந்தவனே, மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி சிறுவோனே ... இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி, நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி, மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே, பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா ... ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல் ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே, வெற்றி வீரனே, பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் ... சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும் பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே, காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே. ... (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.