வாதநோய், பித்த நோய்கள், பானை போன்ற வயிறு, கோழையால் வரும் க்ஷயரோகங்கள், சீதபேதி நோய், ஜன்னி, வயிற்று வலி, மகோதரம், கண்கள் சம்பந்தமான நோய்கள், பெரிய மூல வியாதிகள், ஜுரக் குளிர், காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி முதலிய சில நோய், பிணி வகைகளுடன், தொண்ணூற்றாறு தத்துவக் கூட்டங்களின் மத்தியில் வாழ்கின்ற வஞ்சகர்களும் பேராசைக்காரருமான ஐம்புலன்களால் சூழப்பட்டு, பொல்லாத விசித்திரமான தேக ஆசையால், மண் , பெண் , பொன் என்ற மூவாசையும் கொண்டு, எந்த நல்ல பொருளையும் சற்றும் உணராமல், மாயையை விளைவிக்கின்ற கள்ளத்தனமும், பொய்ம்மையுமே கொண்ட இவ்வுடல்தான் சுகமெனக் கருதி, இந்த உடலைப் போற்றி, நல்ல ஆடைகளாலும், தங்கச் சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து, ஏழு உலகங்களும் எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான், தூய்மை வாய்ந்த அழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன். தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட என்ற முழக்கத்துடன் பேரிகைகள் முழங்க, ஆதிசேஷன் மயக்கமுற, கடல்களும், அண்ட கோளங்களும் அச்சம் கொள்ள, அசுரர்கள் நிறைந்து இருந்த மலைகளும், தீவுகளும் பொடி எழவே நாசமுற, நெருப்பை வீசும் வேலினைச் செலுத்தும் மயில் வீரனே, பிரமனது அழகிய சிரங்களின் மீது குட்டிப் புடைத்து, நல்ல ஈசனாம் சிவபிரானுக்குச் சற்குருவாக அமைந்து, அவர் திருச்செவிகளில் நாடுகின்ற பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே, வேடன், வேங்கை, கிழவன் - எனப் பல வேஷங்கள் தரித்து, பின்பு தினைப்புனம் சென்று, சிறந்த வள்ளியின் மீது, மோக மயக்கம் கொண்டு பித்துப் பிடித்தவனாகி, தேவர்கள் பணியும் பராக்கிரமம் வாய்ந்த பழநியம்பதியில் மேவிய பெருமாளே.