பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில்
சில பாடல் அன்பொடு பயில
பல காவியங்களை உணராதே
பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு
வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசை
இப்படியே திரிந்து
உழல் சருகொத்து உளமே அயர்ந்து
உடல் மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண என
உற்றெழு தோகை யம்பரிதனில்
அற்புத மாக வந்தருள் புரிவாயே
நுகர்வித்தகமாகும் என்று
உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பாலன்
என்றிடும் இளையோனே
நுதிவைத்த கரா மலைந்திடு
களிறுக்கு அருளே புரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே
அகரப்பொருள் ஆதி யொன்றிடு
முதல் அக்கரமானதின் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய
பழநித் திருவாவினன்குடி அதனில்
குடியாய் இருந்தருள் பெருமாளே.
இத்தன்மைத்து என்று சொல்ல அரியதான செந்தமிழ் இசையில் சில பாடல்களை மெய்யன்போடு கற்றுக்கொள்ள பற்பல தமிழ்க் காவியங்களைத் தெரிந்து கொள்ளாமல், பவளத்தையும் வீழிப்பழத்தையும் போன்று சிவந்த வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம் உண்டாக்கும் விரக வேதனையால், சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு அலைந்து திரிந்து, சுழற்காற்றில் அகப்பட்ட சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து, எனது உடல் மெலிந்து அழிவதற்கு முன்னாலே, தகதித்திமி தாகி ணங்கிண என்ற தாளத்திற்கு ஏற்ப நடனமிட்டு எழுகின்ற தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது அற்புதமாக வந்து திருவருள் புரிவாயாக. இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான் பேறறிவு தரும் என்று உமாதேவி சொல்லி அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய வேதங்களெல்லாம் போற்றுகின்ற புகழையுடைய திருக்குமாரன் இவன்தான் என ஏத்தும் இளைய குமாரனே, நுனிப்பல் கூர்மையான முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்ற யானைக்குத் திருவருள் செய்து காத்திட ஒரு நொடியில் கருணையோடு வந்த திருமாலின் மருமகனே, அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும், எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய பழநி மலைக்கடியில் உள்ள திருவாவினன்குடித் தலத்தில் நீங்காது வாசம் செய்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் ... இத்தன்மைத்து என்று சொல்ல அரியதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு பயில ... சில பாடல்களை மெய்யன்போடு கற்றுக்கொள்ள பல காவியங்களை உணராதே ... பற்பல தமிழ்க் காவியங்களைத் தெரிந்து கொள்ளாமல், பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு ... பவளத்தையும் வீழிப்பழத்தையும் போன்று வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே ... சிவந்த வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம் உண்டாக்கும் விரக வேதனையால், சகரக்கடல் சூழும் அம்புவி மிசை ... சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே இப்படியே திரிந்து ... இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு அலைந்து திரிந்து, உழல் சருகொத்து உளமே அயர்ந்து ... சுழற்காற்றில் அகப்பட்ட சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து, உடல் மெலியாமுன் ... எனது உடல் மெலிந்து அழிவதற்கு முன்னாலே, தகதித்திமி தாகி ணங்கிண என ... 'தகதித்திமி தாகி ணங்கிண' என்ற தாளத்திற்கு ஏற்ப உற்றெழு தோகை யம்பரிதனில் ... நடனமிட்டு எழுகின்ற தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது அற்புத மாக வந்தருள் புரிவாயே ... அற்புதமாக வந்து திருவருள் புரிவாயாக. நுகர்வித்தகமாகும் என்று ... இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான் பேறறிவு தரும் என்று உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு ... உமாதேவி சொல்லி அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய நுவல்மெய்ப்புள பாலன் ... வேதங்களெல்லாம் போற்றுகின்ற புகழையுடைய திருக்குமாரன் என்றிடும் இளையோனே ... இவன்தான் என ஏத்தும் இளைய குமாரனே, நுதிவைத்த கரா மலைந்திடு ... நுனிப்பல் கூர்மையான முதலை வலியப் போராடிய களிறுக்கு அருளே புரிந்திட ... கஜேந்திரன் என்ற யானைக்குத் திருவருள் செய்து காத்திட நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே ... ஒரு நொடியில் கருணையோடு வந்த திருமாலின் மருமகனே, அகரப்பொருள் ஆதி யொன்றிடு ... அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும், முதல் அக்கரமானதின் பொருள் ... எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா ... சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே, அமரர்க்கு இறையே வணங்கிய ... தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய பழநித் திருவாவினன்குடி அதனில் ... பழநி மலைக்கடியில் உள்ள திருவாவினன்குடித் தலத்தில் குடியாய் இருந்தருள் பெருமாளே. ... நீங்காது வாசம் செய்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.