கொந்துத் தரு குழல் இருளோ புயலோ
விந்தைத் தரு நுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ
கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ
கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனு மாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா எனவே சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள் பால்
சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள் தரும் இரு சேவடியே சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாய்
வெந்திப்புடன் வரும் அவுண ஈசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமர ஈசனுமே விந்தைப் பணிவிடை புரி போது அவர்மேல்அருள் கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே சொந்தக் குற மகள் கணவா திறல் சேர் கதிர் காமா
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சித் திரு மதிள் புடை சூழ் அருள் சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே.
பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ? விசித்திரமான நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண் வேலாயுதமோ? மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ? வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க விலைமாதர்கள். திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம் பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக. உடை வாள், அம்பராத்தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே, வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே, ஞான வித்தைக்கு உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும் பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள் செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே, தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே, சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின் மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின் கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே, அழகு வாய்ந்த பல வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும் அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும் பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும் முருகனே, தேவர்களின் பெருமாளே.
கொந்துத் தரு குழல் இருளோ புயலோ ... பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ? விந்தைத் தரு நுதல் சிலையோ பிறையோ ... விசித்திரமான நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ ... கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண் வேலாயுதமோ? கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ ... மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ ... வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ? கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனு மாதர் ... வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க விலைமாதர்கள். திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா எனவே சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள் பால் ... திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம் பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள் தரும் இரு சேவடியே சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாய் ... மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக. வெந்திப்புடன் வரும் அவுண ஈசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே ... உடை வாள், அம்பராத்தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே, வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே, விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமர ஈசனுமே விந்தைப் பணிவிடை புரி போது அவர்மேல்அருள் கூர்வாய் ... ஞான வித்தைக்கு உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும் பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள் செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே, தொந்திக் கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே சொந்தக் குற மகள் கணவா திறல் சேர் கதிர் காமா ... தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே, சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின் மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின் கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே, சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சித் திரு மதிள் புடை சூழ் அருள் சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே. ... அழகு வாய்ந்த பல வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும் அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும் பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும் முருகனே, தேவர்களின் பெருமாளே.