தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
கருவினுரு வாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே
கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரஹரசி வாய வென்று தினமும்நினை யாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாணம் இன்றி அழிவேனோ
உரகபட மேல் வளர்ந்த பெரியபெரு மாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரில் அன்று வருவோனே
பரவை மனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழனிமலை மீதில் நின்ற பெருமாளே.
கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து, வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து, பல கலைகள் கற்றறிந்து, மன்மதனுடைய சேட்டையினால், கருங் கூந்தலையுடைய பெண்களின் பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி அழுந்தி, கவலைகள் பெரிதாகி மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து, ஹர ஹர சிவாய என்று நாள்தோறும் நினையாது நின்று, (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட அறியாதவனாய், உணவு தருவோர்கள் தம்முடைய வீடுகளின் முன் வாசலில் நின்று, தினந்தோறும் வெட்கத்தை விட்டு அழிந்து போவேனோ? பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் மீது துயின்ற) பெருமை மிக்க பெருமாள், ஸ்ரீரங்கத்தில் உள்ளவர், உலகை அளந்த திருமால் மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும் பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில் அன்று வந்து தோன்றியவனே பரவை நாச்சியார் வீட்டுக்கு (சுந்தரருக்காக) அன்று ஒரு காலத்தில் தூது நடந்த பரம சிவனுடைய அருளால் வளர்ந்த குமரேசப் பெருமானே பகையாய் நின்ற அசுரர் சேனைகளை மடிவித்து, தேவர்களை சிறையினின்றும் மீளும்படி வென்று, பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
கருவினுரு வாகி வந்து ... கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து, வயதளவிலே வளர்ந்து ... வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து, கலைகள்பல வேதெ ரிந்து ... பல கலைகள் கற்றறிந்து, மதனாலே ... மன்மதனுடைய சேட்டையினால், கரியகுழல் மாதர் தங்கள் ... கருங் கூந்தலையுடைய பெண்களின் அடிசுவடு மார்பு தைந்து ... பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி அழுந்தி, கவலைபெரி தாகி நொந்து ... கவலைகள் பெரிதாகி மனம் நொந்து, மிகவாடி ... மிகவும் வாட்டம் அடைந்து, அரஹரசி வாய வென்று ... ஹர ஹர சிவாய என்று தினமும்நினை யாமல் நின்று ... நாள்தோறும் நினையாது நின்று, அறுசமய நீதி ஒன்றும் ... (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட அறியாமல் ... அறியாதவனாய், அசனமிடு வார்கள் தங்கள் ... உணவு தருவோர்கள் தம்முடைய மனைகள்தலை வாசல் நின்று ... வீடுகளின் முன் வாசலில் நின்று, அநுதினமு நாணம் இன்றி ... தினந்தோறும் வெட்கத்தை விட்டு அழிவேனோ ... அழிந்து போவேனோ? உரகபட மேல் வளர்ந்த ... பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் மீது துயின்ற) பெரியபெரு மாள் அரங்கர் ... பெருமை மிக்க பெருமாள், ஸ்ரீரங்கத்தில் உள்ளவர், உலகளவு மால் ... உலகை அளந்த திருமால் மகிழ்ந்த மருகோனே ... மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே உபயகுல ... (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும் தீப துங்க ... பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே விருதுகவி ராஜ சிங்க ... வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) உறைபுகலி யூரில் ... சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில் அன்று வருவோனே ... அன்று வந்து தோன்றியவனே பரவை மனை மீதி லன்று ... பரவை நாச்சியார் வீட்டுக்கு (சுந்தரருக்காக) அன்று ஒருபொழுது தூது சென்ற ... ஒரு காலத்தில் தூது நடந்த பரமனருளால் ... பரம சிவனுடைய அருளால் வளர்ந்த குமரேசா ... வளர்ந்த குமரேசப் பெருமானே பகை அசுரர் சேனை கொன்று ... பகையாய் நின்ற அசுரர் சேனைகளை மடிவித்து, அமரர்சிறை மீள வென்று ... தேவர்களை சிறையினின்றும் மீளும்படி வென்று, பழனிமலை மீதில் நின்ற பெருமாளே. ... பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.