வறுமைப்பாழ்பிணி ஆற்றப்படாது
உளம் உருகிப் போனது தேற்றப்படாது
இனி மகிமைக் கேடுகள் பார்க்கப்படாதென
அழையாயோ
வலியப் போய் உடல் கூச்சப் படாமையும்
இடியப் பேசிய நா சிக்கலாமையும்
மறுசொற் காதுகள் கேட்கப் படாமையும்
வரலாமோ
கறுவிப்பாய் புலி வேட்டைக்குளே வரு பசுவைப் போல்
மிடியாற் பட்ட பாடெழு கதையை
பாரினில் ஆர்க்குச் சொல்வேன் இனம் அறியாயோ
கவலைச் சாகர நீச்சுக்குளே
உயிர் தவறிப் போம் என ஓட்டத்தில் ஓடியே
இனி அலையாதே
கருணைத் தோணியில் ஏற்றிக் கொள்வாய்
குறைபட்டே உயிர் காத்துக் கொள்வாய் என
முறையிட்டு ஓர் கரி கூப்பிட்ட நாள்
ஒரு குரலிற் போய் உயிர் மீட்டுக் கொள்வோர் திரு மருகோனே
குளிர் முத்தால் அணி மூக்குத்தியோடு
அணி களபப் பூண்முகை பார்த்து
பெண் மோகினி குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் குருநாதா
நிறையத் தேன் விழு பூக்கொத்திலே
கனி கிழியத் தான் விழு காய் கொத்திலே
மயில் நடனக் கால்படு தோப்புக்குளே
கயல் வயலூடே
நதியைக் (நத்தியைக்)
காவிரி யாற்றுக்குளே வரு
வளமைச் சோழ நன் நாட்டுக்குள்
ஏரக நகரிற்
சீர் பெறு
மோட்சத்தையே தரு
பெருமாளே
வறுமை எனும் கொடிய நோய் தீராமல் என் மனம் தளர்ச்சி அடைந்து இனி மீள முடியாமல் வரும் காலத்தில் என் பெருமைக்கு ஏற்படும் குறைவுகளை நான் காணாத வண்ணம் (என்னை அடையாதபடி) என்னை அழைத்துக் கொள்ள மாட்டாயா? வலிமையற்றுப் போய் உடல் உணர்ச்சிகள் அற்றும் இடி முழக்கம் போல் பேசிய நாக்கு குழறியும் பிறர் கூறும் சொற்களை என் காதுகள் கேட்காமலும் ஆகிய இந்த நிலைகள் என்னை வந்து அடையலாமா? கோபம் கொண்டு பாய்கின்ற புலியின் வேட்டைக்குள்ளே அகப்படுகின்ற பசுவைப் போல என் வினைப் பயனால் வறுமையோடு ஏற்பட்ட துன்பங்களினால் எழுதப்பட்ட (தொகுக்கப் பட்ட) ஒரு கதையை (வரலாற்றை) இந்த உலகத்தில் நான் இன்னும் யாரிடம் சொல்லிக் கொண்டிருப்பேன்? எனக்கென்று உலகில் யாரும் இல்லை என்பதை நீ அறியமாட்டாயா? அல்லது இன்னமும் உலகில் யாரிடம் சொல்வேன்? இதை நீ அறியாயோ, நான் உன் அடியவன், உன்னிடம் சொல்லாமல் வேறுயாரிடம் சொல்வேன்? இதை நீ அறியமாட்டாயா? கவலைக் கடலில் ஆழத்தில் அழுந்தி என் உயிர் தவறிப்போகும் என்பதான காலச்சக்கரத்தின் ஓடித் திரிந்து இனி அலையாமல் உன்னுடைய கருணை எனும் படகிலே என்னை ஏற்றிக் கொள்வாய், பிறவி எனும் பெருங்கடலிலே நீந்திக் கொண்டிருக்கும் என்னைக் கரையேற்றுவாய் (யாதுநிலை அற்றலையும் ஏழுபிறவிக் கடலை ஏறவிடும் நற்கருணை ஓடக்காரனே என்கிறார் திருவேளைக்காரன் வகுப்பில்,) முதலையால் குறைபட்டு பொருந்திய இந்த உயிரைக் காத்து நீ அடைக்கலம் அளிப்பாய் என்று முறை செய்து ஒரு ஒப்பற்ற கஜேந்திரன் எனும் யானை கூப்பிட்ட நாளிலே ஒருதடவை கூப்பிட்ட உடனேயே வந்து கஜேந்திரன் எனும் யானையின் குறையைத் தீர்த்து யானையின் உயிரைக் காத்து அதை தன் வசம் ஆக்கிக் கொண்டவராகிய திருமாலின் மருமகனே குளிர்ச்சி எனும் தன்மை கொண்ட முத்துக்களால் ஆன மூக்குத்தியோடு ஆபரணங்களையும் மணம் வீசும் சந்தனத்தையும் பூசு உள்ள மொட்டுப் போன்ற தனங்களையும் பார்த்து மோகம் கொள்ளும் வகையிலே பார்வை இருக்கும் பெண்களிடம் நான் மாட்டிக் கொள்ளாது அருள் குருநாதா. ( நஞ்சினைப் போல் எனும் சிதம்பரம் திருப்புகழில் பெண்கள் மேல் பார்வையைக் கொல் என்பார்) மிகுந்த தேன் உள்ள பூக்கொத்துக்களிலும் கனிந்து வெடித்துத் தானே விழும் நிலையிலே இருக்கும் காய் கொத்துக்களிலும் நடனம் செய்யும் மயில்களின் கால் பதிந்திருக்கும் தோப்புக்குள்ளேயும் கயல் மீன் நிறைந்திருக்கும் வயலுக்குள்ளேயும் சங்கினங்களைக் கொண்ட காவிரி ஆறு பாய்ந்து வளமையைக் கொண்டிருக்கும் சோழ நன் நாட்டினில் திருவேரகம் எனும் நகரில் மேன்மை பெறுவதான மோக்ஷ நிலையை தரவல்ல பெருமை மிக்கவரே. (பிறவி எனும் பெருங்கடலிலே நீந்திக் கொண்டிருக்கும் என்னைக் கரையேற்றுவாய் குருநாதா.)
வறுமைப்பாழ்பிணி ஆற்றப்படாது ... வறுமை எனும் கொடிய நோய் தீராமல் உளம் உருகிப் போனது தேற்றப்படாது ... என் மனம் தளர்ச்சி அடைந்து இனி மீள முடியாமல் இனி மகிமைக் கேடுகள் பார்க்கப்படாதென ... வரும் காலத்தில் என் பெருமைக்கு ஏற்படும் குறைவுகளை நான் காணாத வண்ணம் (என்னை அடையாதபடி) அழையாயோ ... என்னை அழைத்துக் கொள்ள மாட்டாயா? வலியப் போய் உடல் கூச்சப் படாமையும் ... வலிமையற்றுப் போய் உடல் உணர்ச்சிகள் அற்றும் இடியப் பேசிய நா சிக்கலாமையும் ... இடி முழக்கம் போல் பேசிய நாக்கு குழறியும் மறுசொற் காதுகள் கேட்கப் படாமையும் ... பிறர் கூறும் சொற்களை என் காதுகள் கேட்காமலும் வரலாமோ ... ஆகிய இந்த நிலைகள் என்னை வந்து அடையலாமா? கறுவிப்பாய் புலி வேட்டைக்குளே வரு பசுவைப் போல் ... கோபம் கொண்டு பாய்கின்ற புலியின் வேட்டைக்குள்ளே அகப்படுகின்ற பசுவைப் போல மிடியாற் பட்ட பாடெழு கதையை ... என் வினைப் பயனால் வறுமையோடு ஏற்பட்ட துன்பங்களினால் எழுதப்பட்ட (தொகுக்கப் பட்ட) ஒரு கதையை (வரலாற்றை) பாரினில் ஆர்க்குச் சொல்வேன் இனம் அறியாயோ ... இந்த உலகத்தில் நான் இன்னும் யாரிடம் சொல்லிக் கொண்டிருப்பேன்? எனக்கென்று உலகில் யாரும் இல்லை என்பதை நீ அறியமாட்டாயா? அல்லது இன்னமும் உலகில் யாரிடம் சொல்வேன்? இதை நீ அறியாயோ, நான் உன் அடியவன், உன்னிடம் சொல்லாமல் வேறுயாரிடம் சொல்வேன்? இதை நீ அறியமாட்டாயா? கவலைச் சாகர நீச்சுக்குளே ... கவலைக் கடலில் ஆழத்தில் அழுந்தி உயிர் தவறிப் போம் என ஓட்டத்தில் ஓடியே ... என் உயிர் தவறிப்போகும் என்பதான காலச்சக்கரத்தின் ஓடித் திரிந்து இனி அலையாதே ... இனி அலையாமல் கருணைத் தோணியில் ஏற்றிக் கொள்வாய் ... உன்னுடைய கருணை எனும் படகிலே என்னை ஏற்றிக் கொள்வாய், பிறவி எனும் பெருங்கடலிலே நீந்திக் கொண்டிருக்கும் என்னைக் கரையேற்றுவாய் (யாதுநிலை அற்றலையும் ஏழுபிறவிக் கடலை ஏறவிடும் நற்கருணை ஓடக்காரனே என்கிறார் திருவேளைக்காரன் வகுப்பில்,) குறைபட்டே உயிர் காத்துக் கொள்வாய் என ... முதலையால் குறைபட்டு பொருந்திய இந்த உயிரைக் காத்து நீ அடைக்கலம் அளிப்பாய் என்று முறையிட்டு ஓர் கரி கூப்பிட்ட நாள் ... முறை செய்து ஒரு ஒப்பற்ற கஜேந்திரன் எனும் யானை கூப்பிட்ட நாளிலே ஒரு குரலிற் போய் உயிர் மீட்டுக் கொள்வோர் திரு மருகோனே ... ஒருதடவை கூப்பிட்ட உடனேயே வந்து கஜேந்திரன் எனும் யானையின் குறையைத் தீர்த்து யானையின் உயிரைக் காத்து அதை தன் வசம் ஆக்கிக் கொண்டவராகிய திருமாலின் மருமகனே குளிர் முத்தால் அணி மூக்குத்தியோடு ... குளிர்ச்சி எனும் தன்மை கொண்ட முத்துக்களால் ஆன மூக்குத்தியோடு அணி களபப் பூண்முகை பார்த்து ... ஆபரணங்களையும் மணம் வீசும் சந்தனத்தையும் பூசு உள்ள மொட்டுப் போன்ற தனங்களையும் பார்த்து பெண் மோகினி குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் குருநாதா ... மோகம் கொள்ளும் வகையிலே பார்வை இருக்கும் பெண்களிடம் நான் மாட்டிக் கொள்ளாது அருள் குருநாதா. ('நஞ்சினைப் போல்' எனும் சிதம்பரம் திருப்புகழில் பெண்கள் மேல் பார்வையைக் கொல் என்பார்) நிறையத் தேன் விழு பூக்கொத்திலே ... மிகுந்த தேன் உள்ள பூக்கொத்துக்களிலும் கனி கிழியத் தான் விழு காய் கொத்திலே ... கனிந்து வெடித்துத் தானே விழும் நிலையிலே இருக்கும் காய் கொத்துக்களிலும் மயில் நடனக் கால்படு தோப்புக்குளே ... நடனம் செய்யும் மயில்களின் கால் பதிந்திருக்கும் தோப்புக்குள்ளேயும் கயல் வயலூடே ... கயல் மீன் நிறைந்திருக்கும் வயலுக்குள்ளேயும் நதியைக் (நத்தியைக்) ... சங்கினங்களைக் கொண்ட காவிரி யாற்றுக்குளே வரு ... காவிரி ஆறு பாய்ந்து வளமைச் சோழ நன் நாட்டுக்குள் ... வளமையைக் கொண்டிருக்கும் சோழ நன் நாட்டினில் ஏரக நகரிற் ... திருவேரகம் எனும் நகரில் சீர் பெறு ... மேன்மை பெறுவதான மோட்சத்தையே தரு ... மோக்ஷ நிலையை தரவல்ல பெருமாளே ... பெருமை மிக்கவரே. (பிறவி எனும் பெருங்கடலிலே நீந்திக் கொண்டிருக்கும் என்னைக் கரையேற்றுவாய் குருநாதா.)