கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய ...... திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி ...... யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி ...... யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் ...... தரவேணும் பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு ...... முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி ...... யமர்வோனே அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை ...... யெறிவோனே அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய ...... பெருமாளே.
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொடு
உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம்
திரியு நரியு மெரியு முரிமை தெரிய
விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை
மருவ பரம ரருளு முருகோனே
பழன முழவர்
கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ
உருவ அரிய கிரியை
எறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே.
கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும் கடுமையும் கொடுமையும் கொண்ட முச்சூலம் ஏந்திய யமன் கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறோடு உயிர் நீங்கும்படியாக வேகமாய் எழுந்து வரும்பொழுது, திரிகின்ற நரியும், நெருப்பும் உரிமை கோரி நெருங்கி அணுகாமல் என் நிறைவும், அறிவும், உறவும் போன்று விளங்கும் உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும். பெருமலையாம் இமகிரியின் மகளாம் பார்வதியை மணந்த பரமசிவன் அருளிய முருகோனே, வயல்களில் உழவர்கள் ஏர்க்காலால் உழுகின்ற பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே, திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க, உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேலும், மயிலும், வீரமும், ஒளியும், அழகும் கொண்ட பெருமாளே.