கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும் தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட யானைமுகத்தோருக்கு இளையவனே, வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
கடலை பொரியவரை பலகனி கழை ... கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு நுகர் கடின குட உதர ... இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், விபரீத கரட தட மு(ம்)மத ... அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும் நளின சிறுநயன ... தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட கரிணி முகவரது துணைவோனே ... யானைமுகத்தோருக்கு இளையவனே, வடவரையின் முகடு அதிர ... வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா ... ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, மகபதி தருசுதை குறமினொடு ... தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரு மருவு சரசவித மணவாளா ... இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, அடல் அசுரர்கள்குல முழுது மடிய ... வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்அமரர் சிறையைவிட ... உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரும் அயிலை ... அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை விடும் அரகர சரவண பவலோலா ... செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, படல வுடுபதியை ... கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் இதழி யணிசடில ... கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதி வரநதி ... பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகான பழ நிமலை அருள்செய ... அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலை மொழிமதலை ... மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில்வரு பெருமாளே. ... பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.