விரகொடு பிணிவினை இடர் கொடு பேணிக் கரம் கொண்டு இரு காலும் பெற
நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து
அம் புவி ஊடேபிரமனும் வர விட வரும் உடல் எரி இடை புகு தரு வாதைத் தரங்கம் பிறவா முன்
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே
அரு வரை தொளை பட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர்
அனைவரும் மடி உற அமர் பொருத அழகுடன் ஆண்மைத் தனம் கொண்டு எழும் வேலா
இரு வினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செம் தமிழ் வாயா
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே.
சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு, உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன், பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக. அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள் எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே, (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே, இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே.
விரகொடு பிணிவினை இடர் கொடு பேணிக் கரம் கொண்டு இரு காலும் பெற ... சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து ... உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு, அம் புவி ஊடேபிரமனும் வர விட வரும் உடல் எரி இடை புகு தரு வாதைத் தரங்கம் பிறவா முன் ... உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன், மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே ... பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக. அரு வரை தொளை பட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் ... அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள் அனைவரும் மடி உற அமர் பொருத அழகுடன் ஆண்மைத் தனம் கொண்டு எழும் வேலா ... எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே, இரு வினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செம் தமிழ் வாயா ... (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே, இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே. ... இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே.