பாதகமான யாக்கை வாது செய் பாவி
கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை பார படீரம் மாப் பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும்
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்) தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லாச் சுக உதய ஞான வார்த்தை அருள்வாயே
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என
நேமி மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப மா மலர் தூவி வாழ்த்த
யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே.
பாவத்தினால் ஏற்பட்ட உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும் போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும் அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும், வஞ்சகமான பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய, பொருந்தி, தொடக்கம் இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும் இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து அருள்வாயாக. வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம் குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து ஒழித்து, கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும், பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும் உன்னை வாழ்த்த, தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய சேனைகளைக் காத்த பெருமாளே.
பாதகமான யாக்கை வாது செய் பாவி ... பாவத்தினால் ஏற்பட்ட உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை பார படீரம் மாப் பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் ... செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும் போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும் அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும், தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்) தூய்மையில் நாயினேற்கும் வினை தீர ... வஞ்சகமான பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய, சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லாச் சுக உதய ஞான வார்த்தை அருள்வாயே ... பொருந்தி, தொடக்கம் இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும் இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து அருள்வாயாக. சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி ... வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம் குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து ஒழித்து, சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என ... கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று, நேமி மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப மா மலர் தூவி வாழ்த்த ... சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும், பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும் உன்னை வாழ்த்த, யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே. ... தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய சேனைகளைக் காத்த பெருமாளே.