தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன் சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன் பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு பரம னுக்கு நல்ல ...... மருகோனே பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணராமுன்
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன்
பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு(ம்) பரமனுக்கு நல்ல மருகோனே
பழுது இல் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே.
மனைவி, பிள்ளைகள், செல்வம், இவற்றுக்கு உரிமையாக இருக்கும் தன்மை எவ்வளவு என்னும் பெரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் உணர்ந்து கொள்ளுவதற்கு முன்னே, (இளம் பருவத்தில் இருந்து) கோபம் மிகுந்த, வலிமை வாய்ந்த ஐம்புலன்களும் என்னைத் தனிப்பட வளைப்பதனால், கொடிய துன்பக் குழப்பங்கள் அழுந்தப் பொருந்த, என் வலிமை அழிவு படுவதற்கு முன்னர், திருப்பாற் கடலில் புகுந்து துவட்சி உறும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் மேலானவனாகிய திருமாலுக்கு நல்ல மருகனே, குற்றம் என்பதே இல்லாத உன் திருப்புகழ்ச் சொற்களைச் சொல்லுதற்கும், எழுதுவதற்கும், நாள்தோறும் உண்மையைப் பேசுவதற்கும் வேண்டிய நற்குணத்தைத் தந்து அருளுக. கிரெளஞ்சம், எழு கிரி என்ற இரண்டு மலைகளுக்குள் வாசம் செய்த அசுரர்களையும், மிக்கு எழும் மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போருக்கு எழுந்து வந்த சூரனையும், ஏழு கடல்களிலும் முழுகும்படித் தள்ளி, விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு வலிமையைத் தந்தவனே, (பார்வதி என்னும்) அரிவையை, உலகம் உய்ய, அவளுடைய தவத்துக்கு இரங்கி, தமது இடது பக்கத்தில் வைத்துள்ள தலைவரான சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற பிரணவத்தின் உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே, என்னை ஞான நிலையில் ஒழுங்கான நிலையில் வைக்க வல்லவனும், அடியவர்களுக்கு நல்லவனும் ஆகிய பெருமாளே.
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணராமுன் ... மனைவி, பிள்ளைகள், செல்வம், இவற்றுக்கு உரிமையாக இருக்கும் தன்மை எவ்வளவு என்னும் பெரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் உணர்ந்து கொள்ளுவதற்கு முன்னே, (இளம் பருவத்தில் இருந்து) சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் ... கோபம் மிகுந்த, வலிமை வாய்ந்த ஐம்புலன்களும் என்னைத் தனிப்பட வளைப்பதனால், கொடிய துன்பக் குழப்பங்கள் அழுந்தப் பொருந்த, என் வலிமை அழிவு படுவதற்கு முன்னர், பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு(ம்) பரமனுக்கு நல்ல மருகோனே ... திருப்பாற் கடலில் புகுந்து துவட்சி உறும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் மேலானவனாகிய திருமாலுக்கு நல்ல மருகனே, பழுது இல் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே ... குற்றம் என்பதே இல்லாத உன் திருப்புகழ்ச் சொற்களைச் சொல்லுதற்கும், எழுதுவதற்கும், நாள்தோறும் உண்மையைப் பேசுவதற்கும் வேண்டிய நற்குணத்தைத் தந்து அருளுக. இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை ... கிரெளஞ்சம், எழு கிரி என்ற இரண்டு மலைகளுக்குள் வாசம் செய்த அசுரர்களையும், மிக்கு எழும் மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போருக்கு எழுந்து வந்த சூரனையும், எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே ... ஏழு கடல்களிலும் முழுகும்படித் தள்ளி, விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு வலிமையைத் தந்தவனே, அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே ... (பார்வதி என்னும்) அரிவையை, உலகம் உய்ய, அவளுடைய தவத்துக்கு இரங்கி, தமது இடது பக்கத்தில் வைத்துள்ள தலைவரான சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற பிரணவத்தின் உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே, அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே. ... என்னை ஞான நிலையில் ஒழுங்கான நிலையில் வைக்க வல்லவனும், அடியவர்களுக்கு நல்லவனும் ஆகிய பெருமாளே.