துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ் சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம் சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ் சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம் புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண் பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும் புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம் புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம் பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப் பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும் பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக் கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந் துட்க முத்து வாரணச் ...... சதகோடி கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங் கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.
துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம்
சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம்
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம்
சுத்த சொல் பகீரதித் திரை நீலம்
புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை
வேணியர்க்கு அருள் கூரும்
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம்
புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவி
அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி
வாய் தரும் பத்ம சிட்டன் ஓட
முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க
மா முறிந்து உட்க
முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு ஒளிக்க
வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே.
புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம், வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர், சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள், புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம், புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை, (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய, புத்தியும், அஷ்ட மா சித்திகளும் வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை, நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக. வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி, அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து, அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய மேலோனும் ஓட, முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க, மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும், முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும், சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.
துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் ... புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம், சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் ... வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர், சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் ... சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள், சுத்த சொல் பகீரதித் திரை நீலம் ... புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம், புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை ... புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை, வேணியர்க்கு அருள் கூரும் ... (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய, புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் ... புத்தியும், அஷ்ட மா சித்திகளும் வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை, புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே ... நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக. பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவி ... வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி, அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி ... அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து, வாய் தரும் பத்ம சிட்டன் ஓட ... அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய மேலோனும் ஓட, முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க ... முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க, மா முறிந்து உட்க ... மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும், முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு ஒளிக்க ... முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும், வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. ... சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.