திரை வஞ்ச இரு வினைகள்
நரை அங்கம் மலம் அழிய
சிவ கங்கை தனில் முழுகி விளையாடி
சிவம் வந்து குதி கொள
அகம் வடிவு உன்றன் வடிவம் என
திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் அரன் மைந்தன் என
களிறு முகன் எம்பி என மகிழ
அடியென் கண் அளி பரவ மயில் ஏறி அயில் கொண்டு
திரு நடனம் என தந்தை உடன் மருவி
அருமந்த பொருளை இனி அருள்வாயே
பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு
ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன்
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ
பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இரு வினையும்
எரி உண்டு பொடிய அயில் விடுவோனே
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குற மகளொடு
எ(ண்)ணு(ம்) பஞ்சு அணையில் மருவு பெருமாளே.
கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும், சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி, உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய, என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, விளங்கும் தேவர், முனிவர் கூட்டமும், பிரமனும், திருமாலும், (நான்) சிவ பெருமானது குமரனே என்று மகிழ, யானை முகத்தை உடைய கணபதி என் தம்பியே என்று (என்னிடம்) மகிழ்ச்சி கொள்ள, அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி, உன் தந்தையின் திரு நடனம் என்று சொல்லும்படி, உடன் இருந்து என்னுடன் பொருந்தி, அரிய மறைப் பொருளை இனி எனக்கும் அருள்வாயாக. குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்துபடும்படியாக எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான், பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன், பவள நிறத்தினன் என்றும் சொல்லும்படியானவன், உமா தேவியின் கணவன் ஆகிய சிவ பெருமான் ஈன்ற மகனே, இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும், எரிபட்டுப் பொடியாகும்படியாக வேலைச் செலுத்தியவனே, என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன் மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே.
திரை வஞ்ச இரு வினைகள் ... கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும், நரை அங்கம் மலம் அழிய ... மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும், சிவ கங்கை தனில் முழுகி விளையாடி ... சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி, சிவம் வந்து குதி கொள ... உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய, அகம் வடிவு உன்றன் வடிவம் என ... என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் அரன் மைந்தன் என ... விளங்கும் தேவர், முனிவர் கூட்டமும், பிரமனும், திருமாலும், (நான்) சிவ பெருமானது குமரனே என்று மகிழ, களிறு முகன் எம்பி என மகிழ ... யானை முகத்தை உடைய கணபதி என் தம்பியே என்று (என்னிடம்) மகிழ்ச்சி கொள்ள, அடியென் கண் அளி பரவ மயில் ஏறி அயில் கொண்டு ... அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி, திரு நடனம் என தந்தை உடன் மருவி ... உன் தந்தையின் திரு நடனம் என்று சொல்லும்படி, உடன் இருந்து என்னுடன் பொருந்தி, அருமந்த பொருளை இனி அருள்வாயே ... அரிய மறைப் பொருளை இனி எனக்கும் அருள்வாயாக. பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு ... குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் ... ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்துபடும்படியாக எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான், பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ ... பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன், பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா ... பவள நிறத்தினன் என்றும் சொல்லும்படியானவன், உமா தேவியின் கணவன் ஆகிய சிவ பெருமான் ஈன்ற மகனே, இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இரு வினையும் ... இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும், எரி உண்டு பொடிய அயில் விடுவோனே ... எரிபட்டுப் பொடியாகும்படியாக வேலைச் செலுத்தியவனே, எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குற மகளொடு ... என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன் எ(ண்)ணு(ம்) பஞ்சு அணையில் மருவு பெருமாளே. ... மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே.