சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங்கை வஞ்சி மனையாளும்
தஞ்சம் பயின்று
கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்கள்
இளைஞோரும் எந்தன் தனங்கள் என்றென்று
நெஞ்சிலென்றும் புகழ்ந்து
மிகவாழும் இன்பங் களைந்து
துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் தரவேணும்
கொந்தின் கடம்பு
செந்தண் புயங்கள் கொண்டு
அங் குறிஞ்சியுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்
மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த கதிர்வேலா
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர்
அங்கம் பொருந்தும் அழகோனே
அண்டந் தலங்கள் எங்குங் கலங்க
அன்று அஞ்சலென்ற பெருமாளே.
சந்தனத்தைப் பூசிக்கொண்டு மிகவும் அழகு சிறந்த குளிர்ந்த மார்புடைய வஞ்சிக்கொடி போன்ற மனைவியும், என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு, கொஞ்சி ஒலிக்கும் கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய குழந்தைகளும், ஆகியவர்களே என் செல்வங்கள் என்றென்று அடிக்கடி என் மனத்திலே எப்போதும் புகழ்ந்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில்லா இன்பத்தை நீக்கி, எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய, இன்று உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும். கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர் மாலையை செவ்விய குளிர்ந்த புயங்களிலே அணிந்து கொண்டு அழகிய மலையிடங்களில் எல்லாம் வீற்றிருப்பவனே, வாசனை மிக்க தினைப்புன வயலிலே இருந்த மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு மகிழ்ந்த கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி படைத்த வேலனே, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி வென்றிருக்கும் அன்பர்களுடைய அங்கங்களில் எல்லாம் பொருந்தி விளங்கும் அழகனே, அண்டங்களும் உலகங்களும் எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க, அந்த வேளையில் பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே.
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த ... சந்தனத்தைப் பூசிக்கொண்டு மிகவும் அழகு சிறந்த தண்கொங்கை வஞ்சி மனையாளும் ... குளிர்ந்த மார்புடைய வஞ்சிக்கொடி போன்ற மனைவியும், தஞ்சம் பயின்று ... என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு, கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்கள் ... கொஞ்சி ஒலிக்கும் கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய இளைஞோரும் எந்தன் தனங்கள் என்றென்று ... குழந்தைகளும், ஆகியவர்களே என் செல்வங்கள் என்றென்று நெஞ்சிலென்றும் புகழ்ந்து ... அடிக்கடி என் மனத்திலே எப்போதும் புகழ்ந்து மிகவாழும் இன்பங் களைந்து ... மிக்க மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில்லா இன்பத்தை நீக்கி, துன்பங்கள் மங்க ... எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய, இன்றுன் பதங்கள் தரவேணும் ... இன்று உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும். கொந்தின் கடம்பு ... கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர் மாலையை செந்தண் புயங்கள் கொண்டு ... செவ்விய குளிர்ந்த புயங்களிலே அணிந்து கொண்டு அங் குறிஞ்சியுறைவோனே ... அழகிய மலையிடங்களில் எல்லாம் வீற்றிருப்பவனே, கொங்கின் புனஞ்செய் மின் ... வாசனை மிக்க தினைப்புன வயலிலே இருந்த மின்கண்ட கந்த ... மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு மகிழ்ந்த கந்தனே, குன்றம் பிளந்த கதிர்வேலா ... கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி படைத்த வேலனே, ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் ... மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி வென்றிருக்கும் அன்பர்களுடைய அங்கம் பொருந்தும் அழகோனே ... அங்கங்களில் எல்லாம் பொருந்தி விளங்கும் அழகனே, அண்டந் தலங்கள் எங்குங் கலங்க ... அண்டங்களும் உலகங்களும் எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க, அன்று அஞ்சலென்ற பெருமாளே. ... அந்த வேளையில் பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே.