கிஞ்சுகம் எனச் சிவந்த தொண்டையள் மிகக் கறுத்த கெண்டையள் புனக் கொடிச்சி
அதி பாரக் கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலைக் குறத்தி
கிங்கரன் எனப் படைத்த பெயர் பேசா நெஞ்சு உருகி நெக்கு நெக்கு நின்று தொழு நிர்க் குணத்தர்
நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் நின் பதயுக(ம்) ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க
நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனு(ம்)
மதித் திகைக்க மதம் வீசும் கந்து எறி களிற்று உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும்
மதிக்க உக்ர வடி வேல் கொண்டு அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து
அன்பர் புகழப் பொருப்பொடு அமர் ஆடி
அன்று அவுணரைக் களத்தில் வென்று உததியைக் கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே.
கிளி போலச் சிவந்த வாயிதழினள், மிகக் கரிய நிறம் கொண்ட கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள், தினைப் புனம் காத்த கொடி போன்ற பெண்ணான வள்ளி, பூண் அணிந்துள்ள யானையின் தந்தத்தை ஒத்ததும், குங்குமம் அணிந்ததுமான மார்பகத்தை உடைய குற மகளின், வேலைக்காரன் என்று (நீ) அடைந்த பெயரைப் புகழ்ந்து பேசி மனம் உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து நின்று தொழுகின்ற, குணம் கடந்த பெரியோரும், பழிப்புக்கு இடம் தராத பக்தர்களும் வெட்சி மலரைத் தூவுகின்ற உனது திருவடியிணைகளின் பெரும் புகழை வகைப்படுத்தி எடுத்துரைக்க, உனக்குப் பணி செய்ய, முத்தமிழ் ஞானத்தை (எனக்கு) அருள் செய்ய வேண்டும். கம்சன் அனுப்பிய துஷ்டத்தனமான குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த (கண்ணனாய் வந்த) கருட வாகனனாகிய திருமாலும், புத்தியும் கலங்க மத நீரைப் பொழிவதும், கட்டியுள்ள தறியையும் ஒடித்து எறிய வல்லதுமான யானையின் தோலை உரித்து வென்று, அழகிய நடனத்தைச் செய்த ஏகாம்பர மூர்த்தியும், மதிப்புடன் நோக்க, உக்ரம் பொருந்திய கூரிய வேலாயுதத்தால் (சூரனுக்குப்) பயந்திருந்த மூவுலகையும் அஞ்சேல் என்று வலிமையைக் காட்டி, அடியவர்கள் புகழ்ந்து பாராட்டும்படி கிரெளஞ்ச மலையுடன் போர் புரிந்து, அந்நாள் அசுரர்களை போர்க்களத்தில் வென்று, கடலைக் கலங்கும்படி செய்து, தேவர்களின் சிறையை நீக்கி வெளிவிடுத்த பெருமாளே.
கிஞ்சுகம் எனச் சிவந்த தொண்டையள் மிகக் கறுத்த கெண்டையள் புனக் கொடிச்சி ... கிளி போலச் சிவந்த வாயிதழினள், மிகக் கரிய நிறம் கொண்ட கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள், தினைப் புனம் காத்த கொடி போன்ற பெண்ணான வள்ளி, அதி பாரக் கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலைக் குறத்தி ... பூண் அணிந்துள்ள யானையின் தந்தத்தை ஒத்ததும், குங்குமம் அணிந்ததுமான மார்பகத்தை உடைய குற மகளின், கிங்கரன் எனப் படைத்த பெயர் பேசா நெஞ்சு உருகி நெக்கு நெக்கு நின்று தொழு நிர்க் குணத்தர் ... வேலைக்காரன் என்று (நீ) அடைந்த பெயரைப் புகழ்ந்து பேசி மனம் உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து நின்று தொழுகின்ற, குணம் கடந்த பெரியோரும், நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் நின் பதயுக(ம்) ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க ... பழிப்புக்கு இடம் தராத பக்தர்களும் வெட்சி மலரைத் தூவுகின்ற உனது திருவடியிணைகளின் பெரும் புகழை வகைப்படுத்தி எடுத்துரைக்க, நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே ... உனக்குப் பணி செய்ய, முத்தமிழ் ஞானத்தை (எனக்கு) அருள் செய்ய வேண்டும். கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனு(ம்) ... கம்சன் அனுப்பிய துஷ்டத்தனமான குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த (கண்ணனாய் வந்த) கருட வாகனனாகிய திருமாலும், மதித் திகைக்க மதம் வீசும் கந்து எறி களிற்று உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் ... புத்தியும் கலங்க மத நீரைப் பொழிவதும், கட்டியுள்ள தறியையும் ஒடித்து எறிய வல்லதுமான யானையின் தோலை உரித்து வென்று, அழகிய நடனத்தைச் செய்த ஏகாம்பர மூர்த்தியும், மதிக்க உக்ர வடி வேல் கொண்டு அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து ... மதிப்புடன் நோக்க, உக்ரம் பொருந்திய கூரிய வேலாயுதத்தால் (சூரனுக்குப்) பயந்திருந்த மூவுலகையும் அஞ்சேல் என்று வலிமையைக் காட்டி, அன்பர் புகழப் பொருப்பொடு அமர் ஆடி ... அடியவர்கள் புகழ்ந்து பாராட்டும்படி கிரெளஞ்ச மலையுடன் போர் புரிந்து, அன்று அவுணரைக் களத்தில் வென்று உததியைக் கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே. ... அந்நாள் அசுரர்களை போர்க்களத்தில் வென்று, கடலைக் கலங்கும்படி செய்து, தேவர்களின் சிறையை நீக்கி வெளிவிடுத்த பெருமாளே.