ஏட்டில் எழுதப்படும், மனிதர்களைத் துதிக்கும் பாடல்களும், அவற்றுள் சிலவற்றை நீட்டி முழக்கிப் பாடுதலும் சம்பாதிக்க இனிய வழிகள் என்று பிரபுக்களை நாடி சேர்க்கும் பொருட்களை மற்றவர்களோடு பங்கிட்டு உண்ணாது, தகுதிக்கு ஏற்றாற்போல் குலப்பெருமையையே பேசிக்கொண்டு, காட்டிலும், பொருந்திய நாட்டிலும், பழகும் வீட்டிலும் உள்ள உலகத்தார் அனைவரும் பழிக்கும்படியாக வாழ்ந்து, (கடைசியில்) காக்கை, நாய், நரி, பேய்களின் கூட்டங்களுக்கு உணவாகும் இந்த உடம்பு இறந்து படுவது என்பது நீங்காதோ? விளங்கும் ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும் தந்தங்களை உடைய வெள்ளை யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் மணவாளா, உலகு ஆடையாக உடுத்த கடலில் ஆர்ப்பரித்து நின்ற சூரனுடன் போரிட்ட வேலாயுதனே, மயில் வாகனனே, கொங்கு நாட்டின் தலங்களில் அமர்ந்த செவ்வேளே, நாண் ஏற்றப்பட்ட பெரிய வில்லை ஏந்திய மலை வேடர்களின் குலதர்மக் கொள்கைப்படி வளர்ந்த குறமாது வள்ளியின் பங்கனே, அன்றலர்ந்த நல்ல பூக்களைச் சாத்தியே உன் திருவடியைப் போற்றும் தேவர்கள் தம்பிரானே.