எமக்கு எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான வாதப்போருக்கு கொடிகட்டி, அத்தகைய செய்கைக்கே துணிந்து எழுந்து, இப்பூமியின் இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும், எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத சாந்தியான தனி ஞான வாள் கொண்டு, பிரமன் விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை வெட்டித் துணித்து, என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி, கடப்பமலர், விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும் பவள நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை வணங்குவேனோ? திதியின் புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி, ஒளிரும் செக்கச் செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில் ஏந்தியவனே, சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப் பொடிபடச் செய்த உருவத்தோனே, மரகதப் பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது ஏறும் பெருமானே, பழைய பதினொரு ருத்திரர்களும், விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும், மருத்துவ நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித வசுக்களும் ஆகிய முப்பத்து மூன்று (11+12+2+8=33) தேவர்களின் தம்பிரானே.
எதிரொருவர் இலையுலகில் எனஅலகு சிலுகு ... எமக்கு எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான வாதப்போருக்கு விருதிட்டு க்ரியைக்கே யெழுந்து ... கொடிகட்டி, அத்தகைய செய்கைக்கே துணிந்து எழுந்து, பாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித ... இப்பூமியின் இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும், சகலகலை யெட்டெட்டும் எட்டாத மந்த்ரவாளால் ... எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத சாந்தியான தனி ஞான வாள் கொண்டு, விதிவழியின் உயிர்கவர வருகொடிய யமபடரை ... பிரமன் விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை வெட்டித் துணித்து ஆண்மை கொண்டு ... வெட்டித் துணித்து, என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி, நீபம் விளவின் இள இலைதளவு குவளைகமழ் ... கடப்பமலர், விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும் பவளநிற வெட்சித் திருத்தாள்வணங்குவேனோ ... பவள நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை வணங்குவேனோ? திதிபுதல்வரொடுபொருது குருதிநதி முழுகி ... திதியின் புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி, யொளிர் செக்கச் செவத்தேறு செங்கைவேலா ... ஒளிரும் செக்கச் செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில் ஏந்தியவனே, சிகரகிரி தகரவிடுமுருவ ... சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப் பொடிபடச் செய்த உருவத்தோனே, மரகத கலப சித்ரக் ககத்தேறும் எம்பிரானே ... மரகதப் பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது ஏறும் பெருமானே, முதிய பதினொரு விடையர் ... பழைய பதினொரு ருத்திரர்களும், முடுகுவன பரிககன முட்டச் செலுத்து ஆறிரண்டு தேரர் ... விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும், மொழியும் இரு அசுவினிகள் இருசதுவித வசுவெனு ... மருத்துவ நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித வசுக்களும் ஆகிய முப்பத்து முத்தேவர் தம்பிரானே. ... முப்பத்து மூன்று (11+12+2+8=33) தேவர்களின் தம்பிரானே.