ஊனே றெலும்பு சீசீ மலங்க ளோடே நரம்பு ...... கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டு மூனோ டுழன்ற ...... கடைநாயேன் நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து ...... உனையோத நானா ரிரங்க நானா ருணங்க நானார் நடந்து ...... விழநானார் தானே புணர்ந்து தானே யறிந்து தானே மகிழ்ந்து ...... அருளூறித் தாய்போல் பரிந்த தேனோ டுகந்து தானே தழைந்து ...... சிவமாகித் தானே வளர்ந்து தானே யிருந்த தார்வேணி யெந்தை ...... யருள்பாலா சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் ...... பெருமாளே.
ஊனே றெலும்பு
சீசீ மலங்களோடே
நரம்பு கசுமாலம்
ஊழ்நோ யடைந்து
மாசான மண்டும் ஊனோடு
உழன்ற கடைநாயேன்
நானார் ஒடுங்க
நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனையோத
நானார் இரங்க
நானார் உணங்க
நானார் நடந்து விழநானார்
தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து அருளூறி
தாய்போல் பரிந்த
தேனோடு உகந்து
தானே தழைந்து சிவமாகி
தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை யருள்பாலா
சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் பெருமாளே.
சதையின் மேல் மூடியுள்ள எலும்பு, சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன், நரம்புகள், பிற அசுத்தங்கள், ஊழ்வினை சம்பந்தமான நோய்கள், இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன் அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா? வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா? மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா? உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா? சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ? நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா? சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி, மகிழ்பவனும் தானே ஆகி, அருள் சுரந்து, தாய் போன்ற அன்பைக்காட்டும் தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து, தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும் வளர்பவனும் அழியாது இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான், பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே, இவ்வுலகிலுள்ள அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும், உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே.
ஊனே றெலும்பு ... சதையின் மேல் மூடியுள்ள எலும்பு, சீசீ மலங்களோடே ... சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன், நரம்பு கசுமாலம் ... நரம்புகள், பிற அசுத்தங்கள், ஊழ்நோ யடைந்து ... ஊழ்வினை சம்பந்தமான நோய்கள், மாசான மண்டும் ஊனோடு ... இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு உழன்ற கடைநாயேன் ... அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன் நானார் ஒடுங்க ... அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா? நானார் வணங்க ... வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா? நானார் மகிழ்ந்து உனையோத ... மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா? நானார் இரங்க ... உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா? நானார் உணங்க ... சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ? நானார் நடந்து விழநானார் ... நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா? தானே புணர்ந்து தானே யறிந்து ... சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி, தானே மகிழ்ந்து அருளூறி ... மகிழ்பவனும் தானே ஆகி, அருள் சுரந்து, தாய்போல் பரிந்த ... தாய் போன்ற அன்பைக்காட்டும் தேனோடு உகந்து ... தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து, தானே தழைந்து சிவமாகி ... தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும் தானே வளர்ந்து தானே யிருந்த ... வளர்பவனும் அழியாது இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான், தார்வேணி யெந்தை யருள்பாலா ... பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே, சாலோக தொண்டர் சாமீப தொண்டர் ... இவ்வுலகிலுள்ள அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும், சாரூப தொண்டர் பெருமாளே. ... உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே.