இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் இளகிக் கரை புரள
புளகித கற்புர தன பாரம் உடன் மல் கடைபடு(ம்) துற் குணம் அற
நிற் குண உணர்வாலே ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள் புரிவாயே
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும்
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும்
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவச் சுரர் பகை மேல் வேல் விடு விக்ரம
கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே.
ஒரு கைப்படி அளவே உள்ள இடையை உடைய கிளி போன்ற விலைமாதர்களின் வாயிதழ் பருகி, அவர்களுடைய இன்ப நுகர்ச்சியில் காமம் கட்டுக்கு அடங்காது ஓட, மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்புரம் அணிந்துள்ளதுமான மார்பகங்களில் சேர்ந்தவனாகி, மல் யுத்தம் புரிந்தவன் போல் இழிந்த நிலையில் சேரும் எனது தீக்குணம் ஒழிய, குணம் கடந்த ஞான உணர்ச்சியால் உருவில்லாத ஒரு முக்தி நிலையில் நான் புகுமாறு ஒரு சிறிது நீ அருள் புரிவாயாக. அறிவின் திடம் இல்லாது விளங்கிய, தாமரையில் வாழும் பிரமன் சிறையில் அகப்பட்டுக் கொண்டான் என அறிந்து (சிவபெருமானிடம் முறையிடச்) சென்றவரும், தயிர் உண்டவர், நெய் உண்டவர், உலகை உண்டவர் என்று போற்றப்படுகின்றவரும், விஷத்தை உண்டவராகிய சிவபெருமானுக்கு அழகிய மைத்துனருமாகிய திருமால் சூரனுக்குப் பயந்து நிற்க, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களின் மேல் வேலாயுதத்தை விடுத்த வல்லமை படைத்தவனே, (குலகிரிகள் ஏழோடு கிரெளஞ்சத்தையும் சேர்த்து) எட்டு மலைகளையும் விழும்படி வெட்டிய பெருமாளே.
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் இளகிக் கரை புரள ... ஒரு கைப்படி அளவே உள்ள இடையை உடைய கிளி போன்ற விலைமாதர்களின் வாயிதழ் பருகி, அவர்களுடைய இன்ப நுகர்ச்சியில் காமம் கட்டுக்கு அடங்காது ஓட, புளகித கற்புர தன பாரம் உடன் மல் கடைபடு(ம்) துற் குணம் அற ... மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்புரம் அணிந்துள்ளதுமான மார்பகங்களில் சேர்ந்தவனாகி, மல் யுத்தம் புரிந்தவன் போல் இழிந்த நிலையில் சேரும் எனது தீக்குணம் ஒழிய, நிற் குண உணர்வாலே ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள் புரிவாயே ... குணம் கடந்த ஞான உணர்ச்சியால் உருவில்லாத ஒரு முக்தி நிலையில் நான் புகுமாறு ஒரு சிறிது நீ அருள் புரிவாயாக. திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் ... அறிவின் திடம் இல்லாது விளங்கிய, தாமரையில் வாழும் பிரமன் சிறையில் அகப்பட்டுக் கொண்டான் என அறிந்து (சிவபெருமானிடம் முறையிடச்) சென்றவரும், தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் ... தயிர் உண்டவர், நெய் உண்டவர், உலகை உண்டவர் என்று போற்றப்படுகின்றவரும், விட பட்சணர் திரு மைத்துனன் வெருவச் சுரர் பகை மேல் வேல் விடு விக்ரம ... விஷத்தை உண்டவராகிய சிவபெருமானுக்கு அழகிய மைத்துனருமாகிய திருமால் சூரனுக்குப் பயந்து நிற்க, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களின் மேல் வேலாயுதத்தை விடுத்த வல்லமை படைத்தவனே, கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே. ... (குலகிரிகள் ஏழோடு கிரெளஞ்சத்தையும் சேர்த்து) எட்டு மலைகளையும் விழும்படி வெட்டிய பெருமாளே.