கட்டனேற்கு அலம் அலம் இப் புலால் புலை உடல் அறுமுக
நித்தர் போற்றிய நாதா
அறிவிலி இட்டு உணாப் பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே
பலபல புத்தியாயக் கலவியில் எய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் பகடி துடுக்கன்
வாய்க் கறையன் எனத் தராப் படியில் மனித்தர் தூற்றிடலாமோ
குல கிரி பொற்றலாய்க் குரை கடல் வற்றலாய்க் கொடிய அரக்கரார் ஆர்ப்பு எழ
வேதக் குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா
கலை தலை கெட்ட பாயச் சமணரை நட்ட கூர்க் கழு நிரை முட்ட ஏற்றிய
தாளக் கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடாக் கருணையும் ஒப்பிலாப் பெருமாளே.
துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே.
கட்டனேற்கு அலம் அலம் இப் புலால் புலை உடல் அறுமுக ... துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, நித்தர் போற்றிய நாதா ... ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவிலி இட்டு உணாப் பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே ... அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலபல புத்தியாயக் கலவியில் எய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் பகடி துடுக்கன் ... பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய்க் கறையன் எனத் தராப் படியில் மனித்தர் தூற்றிடலாமோ ... வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குல கிரி பொற்றலாய்க் குரை கடல் வற்றலாய்க் கொடிய அரக்கரார் ஆர்ப்பு எழ ... குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதக் குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா ... வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை தலை கெட்ட பாயச் சமணரை நட்ட கூர்க் கழு நிரை முட்ட ஏற்றிய ... கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளக் கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடாக் கருணையும் ஒப்பிலாப் பெருமாளே. ... தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே.