இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் இணை சொல் இளநீரோ
கர அசல இரண்டு குவடேயோ இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான்
எனா மிக வளர்ந்த இள முலை மி(ன்)னார் மோக மாயையில் விழுந்து தணியாமல்
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி
நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி
உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ
கருணை உமை மாதேவி காரணி அநந்த சயன களி கூர் அரி சோதரி புர அந்த(க்) கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள்பாலா
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு புரிவோனே
பரவை இடையே பாதக அசுரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உ(ள்) நெஞ்சு பலிதம் எனவே ஏகவே மயிலில் வந்த குமரேசா
பல மலர்களே தூவி ஆரண(ம்) நவின்று பரவி இமையோர் சூழ நாள் தோறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே.
இரண்டு பொன் மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த, பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ? துதிக்கையை உடைய மலை எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய கிரீடம்தானோ? என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல், தாராள மனத்துடன் ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும் நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி, தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி, உயிரைப் பயனிலதாக நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ? கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும் காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன் (நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி பெற்ற குழந்தையே, கருடனோடு போட்டியிடுவது போல உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகன் என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே, கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து (தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே, பல விதமான மலர்களைத் தூவி, வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும் மகிழ்ந்து நிற்க, பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே.
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் இணை சொல் இளநீரோ ... இரண்டு பொன் மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த, பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ? கர அசல இரண்டு குவடேயோ இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் ... துதிக்கையை உடைய மலை எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய கிரீடம்தானோ? எனா மிக வளர்ந்த இள முலை மி(ன்)னார் மோக மாயையில் விழுந்து தணியாமல் ... என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல், பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி ... தாராள மனத்துடன் ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும் நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி, நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி ... தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி, உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ ... உயிரைப் பயனிலதாக நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ? கருணை உமை மாதேவி காரணி அநந்த சயன களி கூர் அரி சோதரி புர அந்த(க்) கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள்பாலா ... கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும் காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன் (நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி பெற்ற குழந்தையே, கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு புரிவோனே ... கருடனோடு போட்டியிடுவது போல உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகன் என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே, பரவை இடையே பாதக அசுரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உ(ள்) நெஞ்சு பலிதம் எனவே ஏகவே மயிலில் வந்த குமரேசா ... கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து (தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே, பல மலர்களே தூவி ஆரண(ம்) நவின்று பரவி இமையோர் சூழ நாள் தோறும் இசைந்து ... பல விதமான மலர்களைத் தூவி, வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும் மகிழ்ந்து நிற்க, பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே. ... பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே.