தனம் சற்றுக் குலுங்கப் பொன் கலன்கள் பட்டு இலங்கப் பொன் சதங்கைக் கல் சிலம்பு ஒத்திக் கையில் வீணை ததும்ப
கை குழந்தைச் சொல் பரிந்து அற்புக்கு இதங்கப் பொன் சரம் சுற்றிட்டு
இணங்கக் கண் சர வேலால் தினம் பித்திட்டு இணங்கிச் சொல் கரம் கட்டிப் புணர்ந்திட்டுத் தினம் தெட்டிக் கடன் பற்றிக் கொ(ள்)ளு மாதர்
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்கக் குணம் செற்றுச் சிவம் பெற்றுத் தவம் பற்றக் கழல் தாராய்
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம் தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்கு உட்கு அயர்ந்து உக்க
தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரைச் சினம் தத்திக் கொளுந்தக் கைச் சரம் தொட்டுச் சதம் பொர்ப்பைச் சிரம் தத்த
பிளந்து உட்கக் கிரி தூளா(கி)ச் செகம் திக்குச் சுபம் பெற்றுத் துலங்க
பொர்க் களம் புக்குச் செயம் பற்றிக் கொ(ள்)ளும் சொக்கப் பெருமாளே.
மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும் பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க, கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில் சுற்றிக்கொண்டு, ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும் வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம் ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும் விலைமாதர்களின் தந்திர உபாயங்களில் அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க. தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின் தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும் பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற, தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க, கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள, கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை பெற்று விளங்கச் செய்து, போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக் கொண்ட அழகிய பெருமாளே.
தனம் சற்றுக் குலுங்கப் பொன் கலன்கள் பட்டு இலங்கப் பொன் சதங்கைக் கல் சிலம்பு ஒத்திக் கையில் வீணை ததும்ப ... மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும் பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க, கை குழந்தைச் சொல் பரிந்து அற்புக்கு இதங்கப் பொன் சரம் சுற்றிட்டு ... கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில் சுற்றிக்கொண்டு, இணங்கக் கண் சர வேலால் தினம் பித்திட்டு இணங்கிச் சொல் கரம் கட்டிப் புணர்ந்திட்டுத் தினம் தெட்டிக் கடன் பற்றிக் கொ(ள்)ளு மாதர் ... ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும் வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம் ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும் விலைமாதர்களின் சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்கக் குணம் செற்றுச் சிவம் பெற்றுத் தவம் பற்றக் கழல் தாராய் ... தந்திர உபாயங்களில் அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க. தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம் தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்கு உட்கு அயர்ந்து உக்க ... தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின் தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும் பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற, தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரைச் சினம் தத்திக் கொளுந்தக் கைச் சரம் தொட்டுச் சதம் பொர்ப்பைச் சிரம் தத்த ... தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க, கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள, பிளந்து உட்கக் கிரி தூளா(கி)ச் செகம் திக்குச் சுபம் பெற்றுத் துலங்க ... கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை பெற்று விளங்கச் செய்து, பொர்க் களம் புக்குச் செயம் பற்றிக் கொ(ள்)ளும் சொக்கப் பெருமாளே. ... போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக் கொண்ட அழகிய பெருமாளே.