இரவி என வடவை என ஆலால விடம் அது என
உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர
இரதி பதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என இகல் புரிய
மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிது அரிது
அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள்
அவசம் உற அவசம் உற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள்
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமை கொள உனது பரம்
ஆறாத ஒரு தனிமை அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து
ஆ மாய மழை சொரிதல் நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி
கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள்பாலா
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடு பொடி பட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில்வீரா
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குற மகள் மகிழும் லீலா
விதுர மதுர பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே.
சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும் கொடிய வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர, ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச் செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ, ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும், புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து போராடவும், காம வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும், அரகர என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது மிக மிகக் கடினம். அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள். மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள். இப்பெண் திக்கற்றவள். இவள் தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல் என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய பொறுப்பேயாகும். காதல் தணியாத, தன்னந் தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு, இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல் (முருகா) நீ வந்து அருளுக. மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம் துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர் புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்று, பசுக்கள் அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய கோபாலனின் மருகனே, மாசு இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச எழுந்தருளும் குமரி, கெளரி, காளி, பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி, நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே, கடலும், மலையும், அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள் துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே, நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே, மயில் வீரனே, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத் திருவிளையாடல்களைச் செய்தவனே, வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத் தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே.
இரவி என வடவை என ஆலால விடம் அது என ... சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும் உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர ... கொடிய வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர, இரதி பதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ ... ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச் செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ, எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என இகல் புரிய ... ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும், புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து போராடவும், மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும், அரஹர என வநிதை படு பாடு ஓத அரிது அரிது ... அரகர என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது மிக மிகக் கடினம். அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் ... அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள். அவசம் உற அவசம் உற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள் ... மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள். அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமை கொள உனது பரம் ... இப்பெண் திக்கற்றவள். இவள் தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல் என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய பொறுப்பேயாகும். ஆறாத ஒரு தனிமை அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே ... காதல் தணியாத, தன்னந் தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு, இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல் (முருகா) நீ வந்து அருளுக. நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ... மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம் துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர் புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்று, ஆ மாய மழை சொரிதல் நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே ... பசுக்கள் அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய கோபாலனின் மருகனே, நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி ... மாசு இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச எழுந்தருளும் குமரி, கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி ... கெளரி, காளி, பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி, நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள்பாலா ... நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே, பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடு பொடி பட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத ... கடலும், மலையும், அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள் துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில்வீரா ... தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே, நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே, மயில் வீரனே, பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குற மகள் மகிழும் லீலா ... பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத் திருவிளையாடல்களைச் செய்தவனே, விதுர மதுர பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே. ... வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத் தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே.