செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள்
தெண்டு எனத் துணை தாள் மேல் விழ அமர் ஆடி
சிந்தனைப் படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா
சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய்
மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத அந்த நிற் குண ஞான உதய சுந்தரச் சுடர் ஆராய
நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி
கும்பிடத் தகு பாகீரதி மதி மீது கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி
காகோதரம் குண்டல அத்தர் பினாக ஆயுதருடனே
ஏயச் சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களைச் சிறை மீளாய் என
அசுரேசன் தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக
வீர ஆகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே.
சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும் கூட சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் ... சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும் கூட தெண்டு எனத் துணை தாள் மேல் விழ அமர் ஆடி ... சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், சிந்தனைப் படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா ... மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று ... சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் ... உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத அந்த நிற் குண ஞான உதய சுந்தரச் சுடர் ஆராய ... மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ ... நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி ... வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி கும்பிடத் தகு பாகீரதி மதி மீது கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி ... வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், காகோதரம் குண்டல அத்தர் பினாக ஆயுதருடனே ... பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), ஏயச் சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களைச் சிறை மீளாய் என ... நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரேசன் தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக ... அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீர ஆகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே. ... வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.