கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் கவர இங்கிதம் கெறுவிதம் பெற விளையாடும்
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம் தனை உணர்ந்து அணி பணி நிதம்ப(ம்) இன்ப சுகமும் தர முதிர் காம பரவசம் தணிந்து
உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக பதம் அடைந்து இருந்து அருள் பொருந்தும் அது ஒரு நாளே
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட
நிசிசரன் பெரும் குலம் ஓருங்கிற வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ
அம் சுரும்பு உற விரும்பிய அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே.
ஓரங்கள் சிவந்து அகலமாய் விளங்கி, பேச்சைப் பேசுவது போல் பேசி, இரண்டு காதுகளையும் வீசித் தாக்கி, பரந்த ரேகைகளைக் கொண்டு விளங்குகின்ற கரிய கண்கள் துறவிகளுடைய மார்பையும் தொளை செய்வது போல் நீண்டு ஓட, ஆடை தளர்ந்து கரிய கூந்தல் சரிய மார்பகங்களைச் சுமப்பதாலும், அசைவுற்று இடுப்பு ஒடிந்து, உயிரையே கவரும்படி இனிமையுடனும் செருக்குடனும் காம விளையாட்டுகள் செய்யும் மன்மதனுடைய பெரிய சுற்றமாகிய படையான மகளிருடைய சுத்தமான சிவந்த இதழின் சுவையை அறிந்து, பாம்பின் படத்தை ஒத்த பெண்குறி இன்ப சுகத்தை தரப் பெறும் முற்றின காம மயக்கம் ஒழிந்து, உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில் விளையாடும் (கிளியின்) பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? வடக்கே உள்ள பெரிய மலைகள் கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும், அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே, அழகிய வண்டுகள் (மலர்களைச்) சேர விரும்பிய (வள்ளிமலைக்) காட்டையும் அடிமை பூண்ட மனத்துடன், (வள்ளியை) வணங்கும்படி காமப்பற்றுள்ள மயக்கத்தைக் கொண்டு, மிகவும் முற்பட்டு எழுகின்றதும், சிறந்த மலை போல, பெருமை பொருந்திய யானை போன்றதும் அமுத மயமான மென்மையுள்ளதுமாகிய (வள்ளியின்) மார்பகங்களைத் தழுவும் பெருமாளே.
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட ... ஓரங்கள் சிவந்து அகலமாய் விளங்கி, பேச்சைப் பேசுவது போல் பேசி, இரண்டு காதுகளையும் வீசித் தாக்கி, பரந்த ரேகைகளைக் கொண்டு விளங்குகின்ற கரிய கண்கள் துறவிகளுடைய மார்பையும் தொளை செய்வது போல் நீண்டு ஓட, கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் கவர இங்கிதம் கெறுவிதம் பெற விளையாடும் ... ஆடை தளர்ந்து கரிய கூந்தல் சரிய மார்பகங்களைச் சுமப்பதாலும், அசைவுற்று இடுப்பு ஒடிந்து, உயிரையே கவரும்படி இனிமையுடனும் செருக்குடனும் காம விளையாட்டுகள் செய்யும் படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம் தனை உணர்ந்து அணி பணி நிதம்ப(ம்) இன்ப சுகமும் தர முதிர் காம பரவசம் தணிந்து ... மன்மதனுடைய பெரிய சுற்றமாகிய படையான மகளிருடைய சுத்தமான சிவந்த இதழின் சுவையை அறிந்து, பாம்பின் படத்தை ஒத்த பெண்குறி இன்ப சுகத்தை தரப் பெறும் முற்றின காம மயக்கம் ஒழிந்து, உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக பதம் அடைந்து இருந்து அருள் பொருந்தும் அது ஒரு நாளே ... உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில் விளையாடும் (கிளியின்) பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட ... வடக்கே உள்ள பெரிய மலைகள் கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும், நிசிசரன் பெரும் குலம் ஓருங்கிற வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ ... அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே, அம் சுரும்பு உற விரும்பிய அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே. ... அழகிய வண்டுகள் (மலர்களைச்) சேர விரும்பிய (வள்ளிமலைக்) காட்டையும் அடிமை பூண்ட மனத்துடன், (வள்ளியை) வணங்கும்படி காமப்பற்றுள்ள மயக்கத்தைக் கொண்டு, மிகவும் முற்பட்டு எழுகின்றதும், சிறந்த மலை போல, பெருமை பொருந்திய யானை போன்றதும் அமுத மயமான மென்மையுள்ளதுமாகிய (வள்ளியின்) மார்பகங்களைத் தழுவும் பெருமாளே.