இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடு ஆடா
இறுதியில் வேறாய் மாறா நினைவாலே பல பல கோளாய்
மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ
அலை கடல் கோ கோ கோ கோ என உரை கூறா
ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே
அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா
மகபதி வாழ்வே சேயே மயில் வீரா
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே
வளவிய வேளே மேலோர் பெருமாளே.
விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி (யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? அலை வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு, ஓடும் அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி, அழகிய வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும், அந்த அசுரர்களின் உடலையும் வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே, இந்திரனுடைய செல்வமே, இறைவனின் சேயே, மயில் வீரனே, வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே, உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே, செழுமை வாய்ந்த செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே.
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ ... விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடு ஆடா ... என்று வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, இறுதியில் வேறாய் மாறா நினைவாலே பல பல கோளாய் ... கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி ... மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி (யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி, பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ ... அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? அலை கடல் கோ கோ கோ கோ என உரை கூறா ... அலை வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு, ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி ... ஓடும் அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி, அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே ... அழகிய வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும், அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா ... அந்த அசுரர்களின் உடலையும் வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே, மகபதி வாழ்வே சேயே மயில் வீரா ... இந்திரனுடைய செல்வமே, இறைவனின் சேயே, மயில் வீரனே, மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே ... வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே, உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே, வளவிய வேளே மேலோர் பெருமாளே. ... செழுமை வாய்ந்த செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே.