பூஜை செய்வோரது ஆடம்பரத் தோற்றத்தைக் கண்டும், இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள ஆசையினாலும், தெய்வம் எழுந்தருள வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும், (ஆறும் பத்தும் கூடிய) பதினாறு கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும், வேதம், ஆகமம் இவை முழங்கும் இடத்தைக் கண்டும், யாகங்களுக்கு வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல், (அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப் பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே, சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே, மலைகளுக்கு உரியவனே, நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற அன்னியம் இல்லாமல் உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து கடல் போன்று பெரிதான ஆனந்த நிலையையும், உடனே பரமானந்தமாகிய முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன். வீரத்துக்கு இருப்பிடமானவனே, துர்க்கையும், சக்ர வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ, பேய்க் கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து, பிரமன் அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்ட கூடம் பிளவுபட, சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி, வடவாக்கினியையும், நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து, பெரிய சூரனோடு செய்த போரிலே அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே, தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, தேவர்களின் பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.