அடக்க முடியாத மோகம் கொண்டு, பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள அங்கங்களிலே கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி மன விகாரம் அடைந்து குணம் கெட்டு, ஆசை என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள, நான் ஆசாரக் குறைவுபட்டவனாக, மிகவும் அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க, பன்னிரண்டு தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர் மாலையுடனும், ஆண் மயிலாகிய நீல நிறக் குதிரையுடனும், அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க, நான் ஆசு கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு, ஞானோபதேசத்தை எனக்குச் செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்). வாராகி, பெரிய கபாலத்தைக் கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள், மகமாயி, ஆயி, தேவி, சியாமள நிறத்தினள், வாக்குக்கு எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய், சிவனுடன் வாதாடிய காளி, துர்க்கை, வனதேவதை, உமாதேவி, பெரிய பூமியிலே திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள், மஹா காளி, சூலத்தை ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி, அழகிய பவானி, மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி, திருநீற்றை விபூதியாகப் பூசிய மேனியளான நாராயணி, திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே, தோள்கொண்டும் வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும், தோல்வியே இல்லாதவனும், தேவருலகைச் சூறையாடினவனுமான சூரனைக் கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே.