எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண்
பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு
ஆடிக் கோபித்துக் கொடுபோமுன்
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர் என்று
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார்
அக் காலத்துக்கு உறவு ஆர்தான்
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற பாதத்திற் பணிவோனே
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் துறைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் மட்டாகும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறை போல் வளைந்து, வாள் போலக் கூரியதாக உள்ள பற்களை உடையவர்களுமான யம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, ஆட்டுவித்து, அலைத்துக் கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக, சுற்றத்தாரும், நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து நிற்பவர்களும் உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர் என்று சமீபத்தில் இருந்து கொண்டு கூறிக் கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அந்த உயிர் போகும் சமயத்துக்கு (இறைவனைத் தவிர) வேறு யார்தான் துணையாக நிற்பார்கள்? பகைவர்களுடைய வலிமை மிகுந்த தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிவோனே, பசுமையான தினைப் புனத்தின் கண் (காவல் கொண்டு) நிற்கும் வள்ளியின் அழகிய பாதங்களில் பணிந்து வணங்குபவனே, முற்றி வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் மனத்தில் வீற்றிருப்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண் ... உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் மட்டாகும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு ... பிறை போல் வளைந்து, வாள் போலக் கூரியதாக உள்ள பற்களை உடையவர்களுமான யம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, ஆடிக் கோபித்துக் கொடுபோமுன் ... ஆட்டுவித்து, அலைத்துக் கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக, உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர் என்று ... சுற்றத்தாரும், நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து நிற்பவர்களும் உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர் என்று உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் ... சமீபத்தில் இருந்து கொண்டு கூறிக் கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அக் காலத்துக்கு உறவு ஆர்தான் ... அந்த உயிர் போகும் சமயத்துக்கு (இறைவனைத் தவிர) வேறு யார்தான் துணையாக நிற்பார்கள்? பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே ... பகைவர்களுடைய வலிமை மிகுந்த தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிவோனே, பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற பாதத்திற் பணிவோனே ... பசுமையான தினைப் புனத்தின் கண் (காவல் கொண்டு) நிற்கும் வள்ளியின் அழகிய பாதங்களில் பணிந்து வணங்குபவனே, முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் துறைவோனே ... முற்றி வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் மனத்தில் வீற்றிருப்பவனே, முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.