மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும்
வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும்
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது
பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே
புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே
செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு செ(க்)கம் உற்றச் சலமும் மதி சூடி
சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே
கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரரை கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா
கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே.
குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல், பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ? செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு, அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே.
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் ... குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் ... (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது ... ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே ... பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல், புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே ... பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ? செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு செ(க்)கம் உற்றச் சலமும் மதி சூடி ... செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு, சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே ... அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரரை கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா ... மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே. ... வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே.