ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும்
சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி
சத்துவத்தைப் பிரிய விடும் வேளை
சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர
துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும்
வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய
வெற்றி சத்திக் கர அக முருகோனே
வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா
கத்தர் நெட்டுச் சடையர் முக்க(ண்)நக்கக் கடவுள் கச்சி அப்பர்க்கு அருள்செய் குரு நாதா
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே.
கண்ணியில் அகப்பட்ட பறவை தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால் அடியேனாகிய நானும் ஒடுங்கி, இந்தப் பூமியில் பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் போதெல்லாம், பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து கடையவனாகிய எனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும். ஞானம் பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய அண்ணல் கணபதிக்குத் தம்பியே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும் வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரனே, தலைவர், நீண்ட சடையை உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள் காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே, கற்பக மரமுள்ள தேவநாட்டுக் கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில் ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து, அவளை அணைந்த பெருமாளே.
ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் ... கண்ணியில் அகப்பட்ட பறவை தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால் அடியேனாகிய நானும் ஒடுங்கி, சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி ... இந்தப் பூமியில் பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி, சத்துவத்தைப் பிரிய விடும் வேளை ... உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் போதெல்லாம், சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர ... பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து கடையவனாகிய எனது வறுமை தொலைய, துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் ... பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும். வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய ... ஞானம் பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய அண்ணல் கணபதிக்குத் தம்பியே, வெற்றி சத்திக் கர அக முருகோனே ... வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா ... கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும் வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரனே, கத்தர் நெட்டுச் சடையர் முக்க(ண்)நக்கக் கடவுள் கச்சி அப்பர்க்கு அருள்செய் குரு நாதா ... தலைவர், நீண்ட சடையை உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள் காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே, கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே. ... கற்பக மரமுள்ள தேவநாட்டுக் கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில் ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து, அவளை அணைந்த பெருமாளே.