நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி
நீளம் அகலம் சோதி வடிவான
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி
உண் காதலுடன் மேவி
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவை ஊடே
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட
சோதி அயிலும் தாரும் அருள்வாயே
வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒடு
எண் பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே
கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும்
ஆடல் அருணம் சோதி அருள் பாலா
ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண
அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே.
நீரும் பூமியும் சம்பந்தப்படாது தழைத்து விளங்கும் (நாலிதழ்த் தாமரை ஆகிய மூலாதாரம், ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்டானம், பத்து இதழ்த் தாமரையாகிய மணி பூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரையாகிய அனாகதம், பதினாறு இதழ்த் தாமரையாகிய விசுத்தி, இரண்டு அல்லது மூன்று இதழ்த் தாமரையாகிய ஆக்ஞை ஆகிய) ஆதாரங்களின் வழியாக (சிவ யோக நெறியில்) படர்ந்து சென்று, நீளம் அகலம் இவை எல்லை அற்று விளங்கும் ஜோதி சொரூபமான, சிவ நேசத்தால் பெறப்படும் சிவமாதினை திருமணம் செய்து கொண்டது போல அந்தச் சிவச்சுடருடன் நேராகப் பொருந்தி, உள்ளத்தில் நீங்காத அன்புடன் இருந்து, சூரியன், சந்திரன் ஆகியவர்களின் ஒளி எட்ட முடியாத பேரொளி பொருந்தும் அந்த ஜோதி மண்டல பூமியில், தோகை உடைய மயிலைச் செலுத்தியவனாகிய முருகன் இவனே என்று நான் மகிழ்ந்து கூத்தாட, உனது ஒளி வீசும் வேலையும் கடப்ப மாலையையும் தந்தருளுக. கடலின் எல்லாப் பகுதிகளும் கூசி நிலை குலையவும், ஆயிரம் படங்களை உடைய ஆதிசேஷன் வாய் பிளந்து வெளிப்பட்டு ஓடவும், (அது அங்ஙனம் ஓடும்) எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்கள் உதிர்வன போல (அப்பாம்பின்) உயர்ந்த ரத்தின மணிகள் உதிர்ந்து சிதறவும், அழகு ததும்பி ஆடுகின்ற சிறந்த மயிலைச் செலுத்தும் சேவல் கொடியை உடையவனே, பிரமனும், அவனுடைய தந்தையாகிய திருமாலும் தேடி நின்று (இன்னமும் காணாது), பாடிப் போற்றும் திரு நடனம் புரிந்த செஞ்சோதியாகிய அண்ணாமலையார் அருளிய பாலனே, யானைமுகனான கணபதி வள்ளி இருக்கும் இடத்தைத் தேடி ஓடியே வந்து நெருங்கும் அளவுக்கு அழகிய காதலாசையை வள்ளியின் மேல் கொண்ட ஜோதி வடிவமான பெருமாளே.
நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி ... நீரும் பூமியும் சம்பந்தப்படாது தழைத்து விளங்கும் (நாலிதழ்த் தாமரை ஆகிய மூலாதாரம், ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்டானம், பத்து இதழ்த் தாமரையாகிய மணி பூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரையாகிய அனாகதம், பதினாறு இதழ்த் தாமரையாகிய விசுத்தி, இரண்டு அல்லது மூன்று இதழ்த் தாமரையாகிய ஆக்ஞை ஆகிய) ஆதாரங்களின் வழியாக (சிவ யோக நெறியில்) படர்ந்து சென்று, நீளம் அகலம் சோதி வடிவான ... நீளம் அகலம் இவை எல்லை அற்று விளங்கும் ஜோதி சொரூபமான, நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி ... சிவ நேசத்தால் பெறப்படும் சிவமாதினை திருமணம் செய்து கொண்டது போல அந்தச் சிவச்சுடருடன் நேராகப் பொருந்தி, உண் காதலுடன் மேவி ... உள்ளத்தில் நீங்காத அன்புடன் இருந்து, சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவை ஊடே ... சூரியன், சந்திரன் ஆகியவர்களின் ஒளி எட்ட முடியாத பேரொளி பொருந்தும் அந்த ஜோதி மண்டல பூமியில், தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட ... தோகை உடைய மயிலைச் செலுத்தியவனாகிய முருகன் இவனே என்று நான் மகிழ்ந்து கூத்தாட, சோதி அயிலும் தாரும் அருள்வாயே ... உனது ஒளி வீசும் வேலையும் கடப்ப மாலையையும் தந்தருளுக. வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒடு ... கடலின் எல்லாப் பகுதிகளும் கூசி நிலை குலையவும், ஆயிரம் படங்களை உடைய ஆதிசேஷன் வாய் பிளந்து வெளிப்பட்டு ஓடவும், எண் பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே ... (அது அங்ஙனம் ஓடும்) எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்கள் உதிர்வன போல (அப்பாம்பின்) உயர்ந்த ரத்தின மணிகள் உதிர்ந்து சிதறவும், கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே ... அழகு ததும்பி ஆடுகின்ற சிறந்த மயிலைச் செலுத்தும் சேவல் கொடியை உடையவனே, ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ... பிரமனும், அவனுடைய தந்தையாகிய திருமாலும் தேடி நின்று (இன்னமும் காணாது), பாடிப் போற்றும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா ... திரு நடனம் புரிந்த செஞ்சோதியாகிய அண்ணாமலையார் அருளிய பாலனே, ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண ... யானைமுகனான கணபதி வள்ளி இருக்கும் இடத்தைத் தேடி ஓடியே வந்து நெருங்கும் அளவுக்கு அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே. ... அழகிய காதலாசையை வள்ளியின் மேல் கொண்ட ஜோதி வடிவமான பெருமாளே.