வடிவ வேல் தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர் செய் வாள் விழியர்
நெஞ்சினில் மாயம் வளர மால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர்
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே
படி எலா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும் நான் மறையும் உம்பரும் வாழ
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர் தம்
திருமேனி குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர் தம் பெருமாளே.
ஒளி வீசும் வேலாயுதத்தைப் போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும் வாள் போன்ற கண்களை உடையவர்களாய், உள்ளத்தில் வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக் கைப்பற்றும் விலைமாதர்களின் உடுக்கை போன்ற இடை மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப் பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின் வசத்தில் மனக் கலக்கம் அடையாமல், அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக. உலகம் முழுதும் பரவி நின்று அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும், தேவர்களும் வாழும்பொருட்டு, பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு, இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள் சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய அழகிய உடல் குழையும்படி அன்புடன் தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.
வடிவ வேல் தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர் செய் வாள் விழியர் ... ஒளி வீசும் வேலாயுதத்தைப் போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும் வாள் போன்ற கண்களை உடையவர்களாய், நெஞ்சினில் மாயம் வளர மால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் ... உள்ளத்தில் வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக் கைப்பற்றும் விலைமாதர்களின் துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே ... உடுக்கை போன்ற இடை மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப் பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின் வசத்தில் மனக் கலக்கம் அடையாமல், தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே ... அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக. படி எலா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும் நான் மறையும் உம்பரும் வாழ ... உலகம் முழுதும் பரவி நின்று அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும், தேவர்களும் வாழும்பொருட்டு, பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி ... பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர் தம் ... கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு, இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள் சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய திருமேனி குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர் தம் பெருமாளே. ... அழகிய உடல் குழையும்படி அன்புடன் தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.