கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும்
சரி பேசும் கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும்
அரவு போல் இடை படிந்து இரவெலா(ம்) முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் அதர பான அமுதமும் தவிரவே
மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் பயில் பணா வனம் உகந்த குண மாசுண கணம்
பனி நிலா உமிழும் அம்புலி தாளி குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர்
ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர் தம் பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், வளையல்கள் ஒலிக்கும் அல்லிமலர்க் கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படச் செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வாகிய இன்பமும், ஒரு பாம்பு சுற்றிக்கொள்வதைப் போல அவர்களது நுண்ணிய இடையைச் சுற்றிப் படிந்து காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத் தரும் இனிய பெருங் கடலின் சுகத்தைப் பெறுகின்ற வழியான இன்பமும், வாயிதழைப் பருகி அதில் கிடைத்து அனுபவிக்கும் இன்பமும், (இவை யாவும்) என்னை விட்டு அகல, மெளனம் என்னும் கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக. பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின் உடலம் குழையும்படி அன்புடனே தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் ... வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், சரி பேசும் கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் ... வளையல்கள் ஒலிக்கும் அல்லிமலர்க் கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படச் செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வாகிய இன்பமும், அரவு போல் இடை படிந்து இரவெலா(ம்) முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் அதர பான அமுதமும் தவிரவே ... ஒரு பாம்பு சுற்றிக்கொள்வதைப் போல அவர்களது நுண்ணிய இடையைச் சுற்றிப் படிந்து காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத் தரும் இனிய பெருங் கடலின் சுகத்தைப் பெறுகின்ற வழியான இன்பமும், வாயிதழைப் பருகி அதில் கிடைத்து அனுபவிக்கும் இன்பமும், (இவை யாவும்) என்னை விட்டு அகல, மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே ... மெளனம் என்னும் கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக. பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் பயில் பணா வனம் உகந்த குண மாசுண கணம் ... பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், பனி நிலா உமிழும் அம்புலி தாளி குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ... குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின் ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர் தம் பெருமாளே. ... உடலம் குழையும்படி அன்புடனே தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.