உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு மேகலை கழன்று அயலாக
உந்தி வாவியில் விழுந்து இன்பமா(க) முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே
செம் பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட
திங்கள் வேர்வு உற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எ(ன்)னவிதம் கரை சேர்வேன்
கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும் கொண்டல்
புலோமசையள் சங்க்ரம பார கும்ப(ம்) மால் வரை பொருந்து இந்த்ர பூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள
அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலு உற விடும் பெருமாளே.
தேவர்கள் (உண்ணும்) அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி கழன்று வேறுபட்டு விலகி விழ, கொப்பூழ் குளத்தில் விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல், செம்பொன்னால் ஆகிய குடம் போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற, மதி போன்ற முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக நற்கதியை அடைவேன்? தந்தங்கள் நான்கினைக் கொண்டதும் வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன், இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம் போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே, கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும், அங்கங்களைக் கொண்ட நாலு வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு மேகலை கழன்று அயலாக ... தேவர்கள் (உண்ணும்) அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி கழன்று வேறுபட்டு விலகி விழ, உந்தி வாவியில் விழுந்து இன்பமா(க) முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே ... கொப்பூழ் குளத்தில் விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல், செம் பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட ... செம்பொன்னால் ஆகிய குடம் போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற, திங்கள் வேர்வு உற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எ(ன்)னவிதம் கரை சேர்வேன் ... மதி போன்ற முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக நற்கதியை அடைவேன்? கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும் கொண்டல் ... தந்தங்கள் நான்கினைக் கொண்டதும் வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன், புலோமசையள் சங்க்ரம பார கும்ப(ம்) மால் வரை பொருந்து இந்த்ர பூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா ... இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம் போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே, அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள ... கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும், அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலு உற விடும் பெருமாளே. ... அங்கங்களைக் கொண்ட நாலு வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.