வதை பழக மறலிவிறல் மதனன்வழி படுதும் என
வயிர மரகத மகரம் அளவாக வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி
வளை இளைஞர் உயிர் கவர வரு மாய
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள
மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா
முப்பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரிமிசை பரிய தனி எயிறு கொடு
குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட
நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதிவேகக் கலப கக மயில் கடவி
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே.
வதைக்கும் தொழிலில் பழகிய அந்த யமனும், வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில் வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட, மகரமீன் போன்ற அளவில் உள்ள, குண்டலங்கள் உடைய காதின் அளவுக்கு நீண்டு, ரேகைகள் பரவிய, விஷத்தைக் கொண்டதாக வளர்ந்துள்ள, காமப்போருக்குச் சித்தமான இரண்டு விழிகளைக் கொண்டு வளைத்து இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும், தங்கள் இதயத்தின் எண்ணத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எடுத்த பிறவிக்கு உள்ள நெறியை விட்டு, இதிலிருந்து வெளியேறும் வழியைக் காணாது வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்வதற்கு, மகிழ்ச்சியோடு உன்னிரு கண்கொண்டு கடாட்சித்து கருணை சிறிது அருள் புரிவாயாக. இரு திருவடிகளை மலர் கொண்டு பூஜித்துத் தொழுது, மாசில்லாத பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய அளித்து, வாழை, மா, பலா ஆகிய பழங்களை இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குரு நாட்டவர்களான பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதிய ஒப்பற்ற யானை கணபதி பிளிறிடும்படியாக, நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒரு நொடியில் வலம் வந்த, அதிக வேகத்தைக் கொண்ட, தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, அசுரர்களின் (நாற்படைகளான) யானை, தேர், குதிரை, காலாட்படைளுடன் போர் புரிந்த பெருமாளே.
வதை பழக மறலிவிறல் மதனன்வழி படுதும் என ... வதைக்கும் தொழிலில் பழகிய அந்த யமனும், வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில் வயிர மரகத மகரம் அளவாக வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி ... வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட, மகரமீன் போன்ற அளவில் உள்ள, குண்டலங்கள் உடைய காதின் அளவுக்கு நீண்டு, ரேகைகள் பரவிய, விஷத்தைக் கொண்டதாக வளர்ந்துள்ள, காமப்போருக்குச் சித்தமான இரண்டு விழிகளைக் கொண்டு வளை இளைஞர் உயிர் கவர வரு மாய ... வளைத்து இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும், இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறியொழுகி ... தங்கள் இதயத்தின் எண்ணத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள ... எடுத்த பிறவிக்கு உள்ள நெறியை விட்டு, இதிலிருந்து வெளியேறும் வழியைக் காணாது வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்வதற்கு, மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே ... மகிழ்ச்சியோடு உன்னிரு கண்கொண்டு கடாட்சித்து கருணை சிறிது அருள் புரிவாயாக. பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா ... இரு திருவடிகளை மலர் கொண்டு பூஜித்துத் தொழுது, மாசில்லாத பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய அளித்து, முப்பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரிமிசை பரிய தனி எயிறு கொடு ... வாழை, மா, பலா ஆகிய பழங்களை இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட ... குரு நாட்டவர்களான பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதிய ஒப்பற்ற யானை கணபதி பிளிறிடும்படியாக, நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதிவேகக் கலப கக மயில் கடவி ... நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒரு நொடியில் வலம் வந்த, அதிக வேகத்தைக் கொண்ட, தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே. ... அசுரர்களின் (நாற்படைகளான) யானை, தேர், குதிரை, காலாட்படைளுடன் போர் புரிந்த பெருமாளே.