குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக
கொள கொள என அளவு இல் புழு நெளு நெளு என விளை குருதி குமு குமு என இடை வழியில் வர நாறும் உடலின்
மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார்
அன்பு ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள் புரிவாயே
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொ(ள்)ளு நெடிய விறல் மருவாரை
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீலக் கலப ககம் மயில் கடவி
நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே.
குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில், நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் மோகம் நீங்க, கர்ம வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. வடக்கே உள்ள பொன் மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி, யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே.
குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக ... குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, கொள கொள என அளவு இல் புழு நெளு நெளு என விளை குருதி குமு குமு என இடை வழியில் வர நாறும் உடலின் ... கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில், மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் ... நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் அன்பு ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள் புரிவாயே ... மோகம் நீங்க, கர்ம வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொ(ள்)ளு நெடிய விறல் மருவாரை ... வடக்கே உள்ள பொன் மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி ... பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீலக் கலப ககம் மயில் கடவி ... கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி, நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே. ... யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே.